நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான கட்டிடங்களை இடிக்க உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

By என். மகேஷ்குமார்

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஏரிகள், அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தற்போதைய காங்கிரஸ் அரசு, ஹைதராபாத் பேரிடர் மீட்பு, இயற்கை அரண்கள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு முகமை (HYDRAA) எனும் அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஹைதராபாத் மாநகராட்சிக்கு உட்பட்டது. இந்த அமைப்பினர் ஹைதராபாத்தில் ஏரிமற்றும் அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற முடிவு செய்தனர்.

அதன்படி மாதாப்பூரில் திம்மடி குண்டா ஏரியின் ஆக்கிரமிப்புகளை முதலில் அகற்ற தீர்மானித்து, நேற்று அப்பகுதியில் பல கட்டிடங்களை போலீஸ் பாதுகாப்புடன் ஹைட்ரா அமைப்பினர் இடித்தனர்.

இங்கு நடிகர் நாகார்ஜுனா ‘என் கன்வென்ஷன்’ எனும் பெயரில் திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டியுள்ள நிலையில் இங்கு ஆய்வு செய்த அதிகாரிகள், சுமார் 3.5 ஏக்கர் வரை ஏரி நிலத்தை ‘என் கன்வென்ஷன்’ ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி அந்த கட்டிடங்களை இடித்தனர்.

இதையடுத்து நடிகர் நாகார்ஜூனா ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தார். கட்டிடங்களை இடிக்க தடை விதிக்க வேண்டும் என கோரினார். இதனை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான கட்டிடங்களை இடிக்க இடைக்கால தடை விதித்தது.

இது தொடர்பாக நடிகர் நாகார்ஜுனா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஓர் அங்குலம் கூட ஆக்கிரமிப்பு நிலம் இல்லை. இது முற்றிலுமாக பட்டா நிலம் ஆகும். அந்த கட்டிடங்களை இடிப்பதற்கு முன் ஒரு நோட்டீஸ் கூட வழங்கப்பட வில்லை. ஒருவேளை அது ஆக்கிரமிப்பு கட்டிடங்களாக இருந்தால், நானே முன்னின்று இடித்திருப்பேன்’’ என்று கூறியுள்ளார்.

ஆனால், ஹைட்ரா அமைப்பின் ஆணையர் ரங்கநாத் நேற்று ஹைதராபாத் மாதாப்பூரில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘திம்மடிகுண்டாவில் உள்ள பல ஆக்கிரமிப்பு கட்டிடங்களில் நாகார்ஜுனாவின் கட்டிடங்களும் உள்ளன. மொத்தம் 3.5 ஏக்கர் ஏரி நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதில் சுமார் 10 ஆண்டு காலம் வணிக ரீதியாக சம்பாதித்து வந்துள்ளது தெரியவந்தது. இது சட்டப்படி குற்றமாகும். எனவேதான் ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ள கட்டிடங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டன’’ என்று கூறி அதற்கான செயற்கைக்கோள் புகைப்படத்தையும் வெளியிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE