ம.பி.யில் காவல் நிலையம் மீதான தாக்குதல் வழக்கில் 20 பேர் கைது, உள்ளூர் தலைவரின் அரண்மனை வீடு இடிப்பு

By செய்திப்பிரிவு

போபால்: மத்தியபிரதேசத்தில் காவல் நிலையம் மீதான தாக்குதல் வழக்கில் 20 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். உள்ளூர் தலைவரின் அரண்மனை வீட்டின் ஒரு பகுதியைஅதிகாரிகள் இடித்து அகற்றினர்.

மத்திய பிரதேசத்தின் சத்தார்பூர் மாவட்டம் கோட்வாலி காவல் நிலையத்துக்கு கடந்த புதன்கிழமை உள்ளூர் தலைவர்கள் ஜாவேத் அலி, ஷாஜத் அலி ஆகியோர் தலைமையில் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் மனு அளிக்க வந்தனர்.

மகாராஷ்டிராவின் அகமது நகரில் தங்கள் மத நம்பிக்கைக்கு எதிராக மகந்த் ராம்கிரி மகராஜ் பேசியது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். அப்போது கற்கள், தடிகள், இரும்பு குழாய்கள் போன்ற ஆயு தங்கள் மூலம் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் போலீஸார் சிலர் காயம் அடைந் தனர். அங்கு கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு, கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்ட பிறகே வன்முறை கும்பல் கலைந்தது.

இது தொடர்பாக சத்தார்பூர் காவல் கண்காணிப்பாளர் அகாம் ஜெயின் கூறியதாவது: சத்தார்பூர் மாவட்டம் கோட்வாலி காவல் நிலையத்தில் வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில், 20 பேரைஉடனடியாக கைது செய்துள்ளோம். மேலும் பலரை பிடித்து விசாரித்து வருகிறோம். வன்முறை ஏற்பட்டபோது மிக விரைவாக செயல்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தோம். தாக்குதலின் உண்மையான நோக்கம் குறித்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு காவல் கண்காணிப்பாளர் அகாம் ஜெயின் கூறினார்.

ரூ.10 கோடி வீடு: இந்நிலையில் உள்ளூர் தலைவர் ஷாஜத் அலிக்கு சொந்தமான அரண்மனை வீட்டின் ஒரு பகுதியை அதிகாரிகள் இடித்து அகற்றினர். இது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, “ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வீடு கட்டுமான அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளது. இந்த வீட்டை இடிப்பது தொடர்பாக ஏற்கெனவே நோட்டீஸ் வழங்கியிருந்தோம். இந்த சொத்தின் மதிப்பு ரூ.10 கோடி’’ என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE