ஆந்திராவில் மற்றொரு மருந்து தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து: 4 பேர் படுகாயம் 

By செய்திப்பிரிவு

அமராவதி: ஆந்திராவின் அனகாபல்லி மாவட்டத்தில் மற்றொரு தனியார் மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

முன்னதாக இதே அனகாபல்லி மாவட்டத்தில் அச்சுதாபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருந்து தொழிற்சாலையில் கடந்த புதன்கிழமை (ஆக. 21) மதியம் பாய்லர் வெடித்ததில் 17 பேர் உயிரிழந்தனர். 45-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை ஜவஹர்லால் நேரு ஃபார்மா சிட்டியில் உள்ள மற்றொரு தனியார் மருந்து தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நான்கு பேர் படுகாயங்களுடன் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து, அனகாபல்லி மாவட்ட ஆட்சியரை தொலைபேசியில் தொடர்புகொண்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, நிலைமை குறித்து கேட்டறிந்தார். மேலும் உள்துறை அமைச்சர் வி.அனிதாவை உடனடியாக சம்பவ இடத்துக்கு செல்லவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை சந்திக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

அச்சுதாபுரம் தீவிபத்து நடந்த 48 மணி நேரத்துக்குள் அதே மாவட்டத்தில் மற்றொரு தீவிபத்து நடந்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்குமாறு நேற்று முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

முன்னதாக அச்சுதாபுரம் தனியார் மருந்து தொழிற்சாலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடியும், படுகாயமடைந்துள்ளவர்களுக்கு தலா ரூ.50 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 லட்சமும் நிதி உதவி வழங்கப்படும் என்று சந்திரபாபு அறிவித்திருந்தார்.

கடந்த 5 ஆண்டுகளில் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் இதுபோன்று 119 சம்பவங்கள் நடந்துள்ளன. 120 பேர் உயிரிழந்துள்ளனர். இது யாருடைய அலட்சியம் என்பது இப்போது மக்களுக்கு புரியும். எங்கள் ஆட்சி வந்து வெறும் 60 நாட்களே ஆகியுள்ளது. தவறு செய்தவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் சந்திரபாபு கூறியிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE