மல்யுத்த வீராங்கனைகளின் பாதுகாப்பு வாபஸ்? - வினேஷ் போகத் குற்றச்சாட்டுக்கு டெல்லி போலீஸ் விளக்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லியில் இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சி கூற உள்ள மல்யுத்த வீராங்கனைகளுக்கான பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது என்ற வினேஷ் போகத்தின் குற்றச்சாட்டுக்கு டெல்லி போலீஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.

எக்ஸ் தளத்தில் வினேஷ் போகத்தின் குற்றச்சாட்டுக்கு டெல்லி காவல் ஆணையரின் அதிகாரபூர்வ கணக்கில விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: “பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக சாட்சியம் சொல்லவிருக்கும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திரும்பப் பெறப்படவில்லை. மல்யுத்த வீராங்கனைகள் பெரும்பாலும் ஹரியாணாவில் வசிப்பதால், எதிர்காலத்தில் ஹரியாணா காவல்துறையை இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி போலீஸ் பிஎஸ்ஓக்கள் இந்த முடிவை தவறாகப் புரிந்துகொண்டு அறிக்கை கொடுப்பதில் தாமதம் செய்துள்ளனர். தற்போது நிலைமை சரி செய்யப்பட்டுள்ளது. வீராங்கனைகளுக்கான பாதுகாப்பு தொடர்கிறது” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்.பி-யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து இந்திய மல்யுத்த வீரர்கள் டெல்லியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவில் பிரிஜ் பூஷன் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE