பாலியல் குற்ற சட்டத்தை கடுமையாக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு மம்தா கடிதம்

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கி இருக்கும் சூழலில் பாலியல் குற்றங்களை தடுக்க தண்டனை சட்டத்தைக் கடுமையாக்கக் கோரி பிரதமர் மோடிக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

மம்தா பானர்ஜி கடிதத்தில் கூறியதாவது: இந்தியாவில் நாளொன்றுக்கு 90 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்வதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதில் பல சமயங்களில் பாலியல் கொடுமைக்கு உள்ளான பெண்படுகொலை செய்யப்படுகிறார். இந்த போக்கு திகிலூட்டுகிறது. சமூகம் மற்றும் தேசத்தின் மனசாட்சியை உலுக்கி தன்னம்பிக்கையைக் குலைக்கிறது.

இத்தகைய கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது நமது கடமை. அப்படிச் செய்தால் மட்டுமே பெண்கள் பாதுகாப்பாக உணர்வார்கள். இத்தகைய தீவிரமான, நுண்ணுணர்வு சார்ந்த சிக்கலுக்குத் தீர்வு காண சட்டத்தின் மூலம் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டால் அன்றி குற்றவாளிகளுக்குப் பாடம் புகட்ட முடியாது.

இதற்கு முதல்கட்டமாக பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். அவற்றில் 15 நாட்களுக்குள் வழக்கு விசாரணை முடிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE