டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ‘கேஜ்ரிவால் வருவார்’ பிரச்சாரம் தொடக்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, ‘கேஜ்ரிவால் வருவார்’ என்ற பிரச்சாரத்தை ஆம் ஆத்மி கட்சி நேற்று அறிமுகம் செய்தது.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத் துறை வழக்கில் இவருக்கு ஜாமீன் கிடைத்தபோதிலும், சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைக்கவில்லை.

இதே வழக்கில் கைதாகி சிறையில் இருந்த முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா 17 மாதங்களுக்குப் பிறகு ஜாமீனில் விடுதலை ஆகி உள்ளார். கேஜ்ரிவாலுக்கும் விரைவில் ஜாமீன் கிடைக்கும் என ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, அடுத்த ஆண்டுதொடக்கத்தில் டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, ஆளும்ஆம் ஆத்மி கட்சி ‘கேஜ்ரிவால் வருவார்’ என்ற பிரச்சாரத்தை நேற்று அறிமுகம் செய்தது.

இதன்படி, கேஜ்ரிவால் புகைப்படத்துடன் ‘கேஜ்ரிவால் வருவார்’ என்ற வாசகம் எழுதப்பட்ட விளம்பரப் பலகைகள் டெல்லியின் பல்வேறு பகுதியில் வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, “சிசோடியா வந்துவிட்டார், கேஜ்ரிவால் வருவார் என்பதுதான் எங்கள் கட்சியின் புதிய முழக்கம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE