ஜார்க்கண்ட் மாநிலத்தில் காணாமல் போன விமானத்தின் பயிற்சி விமானி சடலமாக மீட்பு

By செய்திப்பிரிவு

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் காணாமல்போன பயிற்சி விமானத்தை தேடும் பணி தொடரும் நிலையில் அதில் சென்ற பயிற்சி விமானி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷட்பூரில் உள்ள சோனாரி விமான நிலையத்தில் இருந்து 2 இருக்கைகள் கொண்ட செஸ்னா-152 ரக பயிற்சி விமானம் கடந்த செவ்வாய்க்கிழமை புறப்பட்டது. தனியார் விமானப் பயிற்சி நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானத்தில் விமானியும் பயிற்சி விமானியும் இருந்தனர். இந்நிலையில் இந்த விமானம் காணாமல்போனது.

இதையடுத்து விமானத்தை தேடும் பணி தொடங்கியது. இந்த விமானம் செரைகேலா-கர்சவான் மாவட்டத்தில் உள்ள சண்டில் அணையில் நொறுங்கி விழுந்தாக கிராமவாசிகள் சிலர் கூறியதை தொடர்ந்து அணையில் தேடும் பணி நடைபெற்றது. இதில் அணையில் இருந்து பயிற்சி விமானி சுப்ரதீப் தத்தாவின் உடலை தேசிய பேரிடர் மீட்பு படையினர் நேற்று மீட்டனர். இவர் செரைகேலா-கர்சவான் மாவட்டம் ஆதித்யபூரை சேர்ந்தவர்.

இதையடுத்து பாட்னாவை சேர்ந்த விமானி ஜீத் சத்ரு (35) மற்றும் பயிற்சி விமானத்தை தேடும் பணி தொடர்கிறது. இப்பணியில் விசாகப்பட்டினத்தில் இருந்து கடற்படை வீரர்கள் 19 பேர் நேற்று இணைந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE