2.9 கோடி பேருக்கு வேலை வழங்கும் திட்டம்: மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள 2.9 கோடி பேருக்கு வேலை வாய்ப்புடன் கூடிய ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவது பற்றி மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை கடந்த மாதம் தாக்கல் செய்தார். அப்போது, வேலைவாய்ப்புடன் ஊக்கத் தொகை வழங்கும் 3 திட்டங்கள் மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் மூலம் அமல்படுத்தப்படும் என அறிவித்தார். இதன் மூலம் அமைப்புசார்தொழில்துறையில் 2.9 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. குறிப்பாக, மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக அதிகாரிகள், மாநில மற்றும் யூனியன் பிரதேச அதிகாரிகளுடன் நேற்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினர்.

அக். 4-ம் தேதி வரை: இதன் தொடர்ச்சியாக வரும்30-ம் தேதி முதல் அக்டோபர்4-ம் தேதி வரை தொடர்ந்துமண்டல அளவிலான ஆலோசனைநடைபெறும் என மத்திய அரசுவட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதில் வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டங்களை அமல்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது.

மேலும் ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 4 புதிய தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்துவது, வேலைவாய்ப்பு உருவாக்கம், வேலைவாய்ப்பு அலுவலகங்களை நவீனமயமாக்குவது, இ-ஷ்ரம் இணையதள ஒருங்கிணைப்பு மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு நலன்களை நீட்டிப்பது ஆகியவை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டம் மற்றும் 4 புதிய தொழிலாளர் சட்டங்களை சுமுகமாக அமல்படுத்த மத்திய அரசு விரும்புகிறது. தொழிலாளர் விவகாரம் ஒருங்கிணைந்த பட்டியலில் இருப்பதால், இது தொடர்பாக மாநில அரசுகளின் ஆலோசனைகளை கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

மண்டல ஆலோசனை கூட்டங்களின்போது, நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்த சமீபத்திய தகவலை பகிர்ந்து கொள்ளுமாறு மாநிலஅரசுகள் கேட்டுக்கொள்ளப்பட் டுள்ளன. இதில் இடம்பெறும் வெற்றிகரமான உத்திகளை பிறமாநிலங்கள் பின்பற்ற இது உதவிகரமாக இருக்கும் என மத்திய அரசு கருதுகிறது.

இந்த ஆலோசனை கூட்டங் களில் அனைத்து மாநில பிரதிநிதிகளும் பங்கேற்பதை உறுதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, பெங்களூரு, குவாஹாட்டி, ராஜ்கோட், புவனேஸ்வர், லக்னோ மற்றும் சண்டிகர் உள்ளிட்ட நகரங்களில் மண்டல ஆலோசனை கூட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE