கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொல்லப்பட்ட மருத்துவமனையில் சிஐஎஸ்எப் அதிகாரிகள் ஆய்வு

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள மத்தியப்படை பணிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த மருத்துவமனையில் சிஐஎஸ்எப் உயரதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் 31 வயது பெண் மருத்துவர் கடந்த 9-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தது. கடந்த 15-ம் தேதி அதிகாலையில் ஒரு கும்பல் ஆர்.ஜி. கர் மருத்துவமனைக்குள் புகுந்து 2 தளங்களில் மருத்துவ சாதனங்கள் மற்றும் பிற பொருட்களை சேதப்படுத்திய நிலையில் அதுகுறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதுபோன்ற சம்பவங்களை எதிர்கொள்ள கொல்கத்தா காவல் துறை தயார் நிலையில் இல்லாதது குறித்து கவலை தெரிவித்தனர். ஆகஸ்ட் 15-ம் தேதிவன்முறைக்கு பிறகு பெரும்பாலான மருத்துவர்கள் மருத்துவமனையை விட்டு வெளியேறிவிட்டதை கவனத்தில் கொண்ட நீதிபதிகள் அவர்கள் பணிக்கு திரும்ப பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவது அவசியம் என்றனர்.

அப்போது மருத்துவமனை வளாகத்திற்கு மத்தியப் படைகள் பாதுகாப்பு அளிக்கும் என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உறுதி அளித்தார். இதில்தங்களுக்கு ஆட்சேபனை ஏதுமில்லை என்று மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான கபில் சிபல் கூறினார்.

இந்நிலையில் நாடாளுமன்றம், விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களை பாதுகாக்கும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் அதிகாரிகள் நேற்று கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவமனைக்கு வந்தனர். பாதுகாப்பை ஏற்றுக்கொள்வது தொடர்பாக மருத்துவமனை வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து சிஐஎஸ்எப் மூத்த அதிகாரி கே.பிரதாப் சிங் கூறுகையில், “உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் இங்கு வந்துள்ளோம். எங்கள் பணியை முடித்த பிறகு மூத்த அதிகாரிகள் உங்களுக்கு விளக்கம் அளிப்பார்கள்” என்றார்.

இதற்கிடையில் ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் நேற்று 6-வது சுற்று விசாரணைக்காக கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகம் சென்றார்.

கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி பெண் மருத்துவரின் உடல், மருத்துவமனையின் கருத்தரங்கு அறையில்கண்டெடுக்கப்பட்ட பிறகு நிலைமையை சந்தீப் கோஷ் கையாண்டார். அவரிடம் கடந்த 5 நாட்களில் 64 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

அம்மருத்துவமனையின் முதல்வராக சந்தீப் கோஷ் பதவி வகித்த காலத்தில் நிதி முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரிக்க மேற்கு வங்க அரசு தனியே சிறப்பு புலனாய்வு குழு அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காவல் துறை அதிகாரிகள் 3 பேர் சஸ்பெண்ட்: கடந்த 15-ம் தேதி அதிகாலை ஆர்.ஜி.கர்மருத்துவமனைக்குள் ஒரு கும்பல் வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக 3 அதிகாரிகளை மேற்கு வங்க அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.

இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறும்போது, “வன்முறை சம்பவம் தொடர்பாக மாநகர காவல் துறையின் உதவி ஆணையர்கள் இருவரும் இன்ஸ்பெக்டர் ஒருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE