ஜெகன் வெளிநாடு செல்ல அனுமதிக்க கூடாது: நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல்

By என். மகேஷ்குமார்

ஹைதராபாத்: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வெளிநாடு செல்ல அனுமதிக்க கூடாது என சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளது. ஹைதராபாத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. ஜெகன், ஆந்திர முதல்வராக இருந்தபோது, அரசுப் பணிகள் காரணமாக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரினார். இதனை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. எனினும் வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் சமீபத்திய தேர்தலில் ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தது. இதையடுத்து ஜெகன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை மீண்டும் சூடு பிடித்துள்ளது. இவ்வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் ஜெகன், இங்கிலாந்தில் உள்ள தனது மகள்களை காண்பதற்காக வெளிநாடு செல்வதற்கான அனுமதி வழங்க வேண்டும் என ஹைதராபாத் சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு சிபிஐ நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பல கோடி ரூபாய் சொத்துக் குவிப்பு வழக்கை எதிர்கொண்டிருக்கும் ஜெகன் மோகன் ரெட்டியை வெளிநாடு செல்ல அனுமதிக்க கூடாது என சிபிஐ தரப்பில் நேற்று மனு தாக்கல்செய்யப்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பினரும் நேற்று தங்களின் வாதங்களை முன் வைத்தனர். இதையடுத்து வரும் 27-ம் தேதி தனது முடிவை அறிவிப்பதாக சிறப்பு நீதிபதி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE