“குறைந்த வருமானமும் பணவீக்கமும்” - கேப் டிரைவருடன் பயணித்து குறைகளை கேட்டறிந்த ராகுல் காந்தி: வீடியோ வைரல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கேப் டிரைவர் ஒருவருடன் பயணம் செய்து அவரிடம் கிக் (gig) தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேட்டறியும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ள ராகுல் காந்தி கூறியிருப்பதாவது: “குறைந்த வருமானமும் பணவீக்கமும் தொழிலாளர்களை மூச்சுத் திணற வைக்கிறது. இதுதான் இந்தியாவில் கிக் தொழிலாளர்களின் நிலை.

உபெர் பயணத்தின் போது சுனில் உபாத்யாய் உடன் கலந்துரையாடினேன். நாட்டில் உள்ள கேப் டிரைவர்கள் மற்றும் டெலிவரி ஏஜென்டுகள் போன்ற கிக் தொழிலாளர்களின் பிரச்சினைகளை தெரிந்து கொள்ளும் நோக்கில் அவரது குடும்பத்தினரையும் சந்தித்தேன்.

கைக்குக் கிடைக்கும் வருமானத்தில் சேமிப்பு இல்லாமலும், குடும்பத்தின் எதிர்காலத்திற்கு எந்த அடிப்படையும் இல்லாமல் அவர்கள் போராடுகிறார்கள். இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க, காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள் உறுதியான கொள்கைகளை உருவாக்குவதன் மூலம் நீதியை நிலைநாட்டும்” இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மேலும் இத்துடன் அவர் பதிவிட்டுள்ள 11 நிமிட வீடியோவில், சுனில் உபாத்யாய் என்ற அந்த டிரைவரின் காரில் ஏறிய ராகுல் காந்தி, கிக் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கேட்டறிந்தார். இதனையடுத்து உணவகம் ஒன்றில் சுனில் உபாத்யாய் குடும்பத்தினருடன் சாப்பிட்டு கலந்துரையாடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE