ரக்‌ஷா பந்தன் பற்றிய கதை: விமர்சனங்களுக்கு சுதா மூர்த்தி விளக்கம்

By செய்திப்பிரிவு

மும்பை: ரக்‌ஷா பந்தன் பின்னணியில் ராணி கர்ணாவதி - அரசர் ஹூமாயூன் பற்றி கதையை சுதா மூர்த்தி பகிர்ந்து கொண்ட காணொலிக்கு எதிர்வினைகள் வந்த நிலையில், தற்போது அது குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான ரக்‌ ஷா பந்தன் பண்டிகை நேற்று (ஆக.19) கொண்டாடப்பட்டது. இது அண்ணன் - தங்கைகளுக்கு இடையிலான பாசப் பிணைப்பை பறைசாற்றும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி, ராகுல் காந்தி எம்.பி உள்ளிட்ட பலரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் ரக்‌ஷா பந்தன் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் மாநிலங்களவை எம்.பியும், இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மனைவியுமான சுதா மூர்த்தி ரக்‌ஷா பந்தன் குறித்து பேசி ஒரு காணொலியை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

அதில், 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ராணி கர்ணாவதி, எதிரிகளால் தாக்கப்பட்ட சமயத்தில் முகாலய அரசரான ஹூமாயூனுக்கு ஒரு சிறிய கயிறை அனுப்பி, தன்னை ஒரு தங்கையாக நினைத்து உதவுமாறு கேட்டதாக அந்த வீடியோவில் சுதா மூர்த்தி குறிப்பிட்டார்.

இந்த பதிவின் கீழ் கமென்ட் செய்த பலரும், ரக்‌ஷா பந்தனின் வரலாறு மகாபாரதம் காலத்திலிருந்து தொடங்கியதாகவும், சிசுபாலனை கொல்வதற்காக கிருஷ்ணர் சுதர்சன சக்கரத்தை பயன்படுத்தியபோது அது அவரது விரலை வெட்டிவிட்டதாகவும், உடனே திரவுபதி ஒரு சிறிய துணியால் அந்த காயத்தில் கட்டியதே பின்னாட்களில் ரக்‌ஷா பந்தனாக மாறியது என்றும் சுட்டிக் காட்டினர்.

இதனையடுத்து இது குறித்து விளக்கமளித்துள்ள சுதா மூர்த்தி, “ரக்‌ஷா பந்தன் குறித்து நான் பகிர்ந்து கொண்ட கதை, அந்த பண்டிகையுடன் தொடர்புடைய பல கதைகளில் ஒன்றாகும். வீடியோவில் நான் கூறியது போல், அது ஏற்கெனவே நிலத்தின் வழக்கமாக இருந்த ஒன்றுதான். ரக்‌ஷா பந்தனுக்குப் பின்னால் இருக்கும் அழகான அடையாளத்தைப் பற்றி நான் வளர்ந்தபோது கற்றுக்கொண்ட பல கதைகளில் ஒன்றை முன்னிலைப்படுத்துவதே எனது நோக்கமாக இருந்தது. ரக்‌ஷா பந்தன் என்பது மிகவும் பழமையான பாரம்பரியமாகும்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE