புதிய வடிவில் ‘இடஒதுக்கீடு பறிப்பு’ - மத்திய அரசு உயர் பதவிகள் மீதான ராகுல் குற்றச்சாட்டும் பின்புலமும்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நேரடி ஆள்சேர்ப்பு (Lateral Entry) விவகாரத்தில் பாஜகவுக்கு மீண்டும் பதிலடி கொடுத்துள்ள ராகுல் காந்தி, ‘பாஜகவின் ராமராஜ்ஜியத்தின் திரிக்கப்பட்ட பதிப்பு என்பது அரசியலமைப்பை அழிப்பதுடன், சமானியர்களிடம் இருந்து இடஒதுக்கீட்டை பறிக்கிறது” என்றும் சாடியுள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “அரசுப் பணியாளர்களை யுபிஎஸ்சி மூலம் தேர்வு செய்வதற்கு பதிலாக ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) வழியாக சேர்ப்பதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துகிறார். மத்திய அரசின் முக்கியமான பணிகளுக்கு லேட்ரல் என்ட்ரி மூலம் ஆட்களைச் சேர்ப்பது பட்டியல், பழங்குடி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கான இடஒதுக்கீடு வெளிப்படையாக பறிக்கப்படுகிறது என்று அர்த்தம்” என்று தெரிவித்திருந்தார்.

பாஜக பதிலடி: ராகுல் காந்தியின் இந்தக் கருத்துக்கு பாஜக எதிர்வினையாற்றியது. இந்தக் கருத்தாக்கத்தை முதலில் அறிமுகப்படுத்தியது காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ அரசுதான் என்பதை ராகுல் காந்திக்கு நினைவூட்டுவதாக கூறியது பாஜக. இது குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் பதிவொன்றில், "நேரடி ஆள்சேர்ப்பு விஷயத்தில் இந்திய தேசிய காங்கிரஸின் பாசாங்கு வெளிப்பட்டு விட்டது. இந்தக் கருத்தாக்கத்தை உருவாக்கியதே யுபிஏ அரசுதான்.

இரண்டாவதாக, நிர்வாக சீர்திருத்த ஆணையம் (ஏஆர்சி) யுபிஏ அரசு காலத்தில் 2005-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. வீரப்ப மொய்லி அதற்கு கலைமை தாங்கினார். யுபிஏ காலத்து ஏஆர்சி சிறப்பான பங்களிப்பு தேவைப்படும் இடங்களில் உள்ள இடைவெளிகளை நிரப்புவதற்கு நிபுணர்களை நேரடியாக நியமனம் செய்யலாம் என்று பரிந்துரை செய்திருந்தது. பாஜக தலைமையிலனா என்டிஏ அரசு இந்தப் பரிந்துரையில் ஒரு வெளிப்படைத் தன்மையை உருவாக்கியுள்ளது. யுபிஎஸ்சி மூலமாக நேரடியாகவும் வெளிப்படையாகவும் பணிகள் நிரப்பப்படும். இந்த சீர்திருத்தம் நிர்வாகத்தை மேம்படுத்தும்" என்று தெரிவித்திருந்தார்.

அக்.2-ல் போராட்டத்துக்கு அகிலேஷ் அழைப்பு: எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் அகிலேஷ் யாதவ் இந்த நேரடி ஆள்சேர்ப்பு நாட்டுக்கு எதிரான மிகப் பெரிய சதி என்று கூறினார். ராகுல் காந்தியைப் போல அகிலேஷும் இந்த நேரடி ஆள்சேர்ப்பு விஷயம், விளிம்புநிலை வகுப்பினரின் இடஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகளை பறிப்பது என்று தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் பதிவொன்றில் அகிலேஷ், "யுபிஎஸ்சி-யின் பின்வாசல் வழியாக தங்களின் சித்தாந்தக் கூட்டாளிகளை அரசு உயர் பதவிகளில் அமர்த்த பாஜக தீட்டுகின்ற சதிக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டம் தொடங்குவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்த நேரடி ஆள்சேர்ப்பு முறை இன்றைய அதிகாரிகளுக்கான வாசல்களை அடைக்கும் அதே நேரத்தில் இளைய அதிகாரிகள் நிகழ் காலம் மற்றும் எதிர்காலத்தில் உயர் பதவிகளுக்கு செல்லும் வாய்ப்பைத் தடுக்கிறது. சாமானிய மக்கள் உதவியாளர்களாகவும் குமாஸ்தாக்களாகவும் மட்டும் இருக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

பாஜக அரசு இதனைத் திரும்ப பெறவில்லை என்றால், அக்டோபர் 2-ம் தேதி ஒரு புதிய இயக்கத்தைத் தொடங்க எங்களுடன் தோளோடு தோள் சேர்ந்து நிற்க இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். அரசு இயந்திரத்தை கார்ப்பரேட்கள் கைப்பற்றுவதை எங்களால் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது" என்று அகிலேஷ் தெரிவித்துள்ளார்.

நேரடி ஆள்சேர்ப்பு (Lateral Entry) விவகாரம்: யுபிஎஸ்சி சமீபத்தில் இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள், துணை செயலாளர்கள் போன்ற பதவிகளுக்கு நேரடி ஆள்சேர்ப்பு மூலம் பணியமர்த்துவதற்கான அறிவிப்பினை வெளியிட்டிருந்தது. இது எஸ்சி, எஸ்டி மற்றும் ஒபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டு உரிமைகளை குறைத்து மதிப்பிடுகின்றது என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்திருந்தன. என்றாலும், சில பதவிகளுக்கு சிறப்பு ஞானம் தேவைப்படுகிறது என்று ஏஆர்சி அங்கீகரித்துள்ளது. அது அரசுப் பணியாளர்களிடம் இருப்பதில்லை, அப்படியான நேரத்தில் அந்த இடைவெளிகளை நிரப்ப தனியார் துறை, கல்வித் துறை மற்றும் பொதுத் துறைகளில் இருந்து நிபுணர்களை எடுத்துக் கொள்ளலாம் என்று பரிந்துரைக்கிறது.

இந்தத் திட்டம் மோடியின் ஆட்சி காலத்தில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், இந்தியாவின் நிர்வாக இயந்திரத்தின் செயல்திறன் மற்றும் பதிலளிக்கக்கூடிய திறனை மேம்டுத்துவதற்காக நிபுணர்களின் தேவையால் இது உந்தப்பட்டத்து என்று தகவல் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE