திருப்பதி: தனது குடும்பத்தை காப்பாற்ற அண்டை மாநிலத்தில் இருந்து ஆந்திராவுக்கு குடிபெயர்ந்து, பத்மாவதி தாயார் மற்றும் ஏழுமலையானின் திருவுருவப்படங்களையே 10 ஆயிரத்திற்கும் மேல் வரைந்து, அதனை பிரமுகர்கள், வியாபாரிகளுக்கு கொடுத்து வாழ்க்கையை கடந்தவர் பிரபல ஓவியர் ’கிடாம்பி’ ரங்கமணி.
64 கலைகளில் ஓவியமும் ஓர் அபூர்வக் கலை. இது அனைவருக்கும் சாத்தியமில்லை. ஓவியம் சிலருக்கு பொழுது போக்கு. சிலருக்குஅதுவே வாழ்க்கை. கிடாம்பி ரங்கமணி இதில்இரண்டாவது ரகம். கல்வி இவரை கைவிட்டதால், ஓவியத்தில் நாட்டம் கொண்டார். 1963-ல் இண்டியன் இங்கில் இவர் ஸ்ரீநிவாசரை கருப்பு-வெள்ளையில் வரைந்தார். இண்டியன் இங்கில்வரைவது கொஞ்சம் கஷ்டமாக இருந்ததாலும், அதிக நேரம் எடுப்பதாலும், அவர் ஹார்ட்போர்டில் வண்ண மயமாக ஆயில் பெயிண்டிங்கில் வரைவதை பழகி கொண்டார். இதனிடையே கிடாம்பி ரங்கமணிக்கும், ஆந்திர மாநிலம், குப்பம் அருகே உள்ள லட்சுமி புரத்தை சேர்ந்த மைதிலிக்கும் திருமணம் ஆனது. இவர்களுக்கு ஷைலஜா, கீதா, வசுமதி என்கிற 3 மகள்களும், பாலாஜி என்கிற மகனும் பிறந்தனர்.
சிறிது காலம் பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரத்தில் காலத்தை கழித்த ரங்கமணி,ஆந்திர மாநிலம், சித்தூரில் தனக்கும், தமது மனைவி மைதிலிக்கும் உறவினர்கள் அதிகம் உள்ளதால், சித்தூருக்கு கடந்த 1978-ல் இடம்பெயர்ந்தனர். திருப்பதி ஏழுமலையான் மற்றும்பத்மாவதி தாயார் படங்களையும் 10 ஆயிரம் வரை வரைய வேண்டும். அதில்தான் தனதுகுடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என பெருமாளிடம் ரங்கமணி வேண்டிக்கொண்டார். தாயார் மற்றும் பெருமாளை தவிர வேறு எந்தபடங்களையும் வரைவதில்லை என்றும் மனதுக்குள் ஒரு உறுதியை எடுத்துக்கொண்டார்.
அதன்படி, 2 அடி முதல் 6 அடி வரை பத்மாவதிதாயார், ஏழுமலையானின் படங்களை வரையஇவருக்கு பலர் வாய்ப்புகளை வழங்கினர். அரசியல், சினிமா பிரபலங்கள் முதற்கொண்டு, வியாபாரிகள், நண்பர்கள் என பலர் இவரின் திறமையை பார்த்து, படம் வரைய ஆர்டர்கள் கொடுத்தனர். இப்படி சிறுக, சிறுக வந்த பணத்தால், 4 பிள்ளைகளையும் நன்றாக படிக்க வைத்தார். திருமணமும் செய்து வைத்தார். ஏழுமலையானிடம் இவர் வேண்டிக்கொண்டபடி, 10,000 படங்களும் நிறைவு பெற்றது. அதற்கும் மேல் சிலபடங்களை கேட்டவர்களுக்கு ரங்கமணி வரைந்துகொடுத்துள்ளார். இவர் தனது 63-வது வயதில் மறைந்தார். இவரது மூத்த மகள் ஷைலஜா,குப்பம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் வசிக்கிறார். தனது தந்தை குறித்து, ‘இந்துதமிழ் திசை’யிடம் பேசியபோது, ‘‘1963-ல் இண்டியன் இங்க்கில்தான் தனது தந்தை படம் வரைவார். அவர் வரைந்த இந்த ஓவியங்கள் இன்றும் பேசுகின்றன. அவர் எங்களை வளர்க்கவே ஓவியத்தை கற்றுக்கொண்டார். அதுவும் பத்மாவதி தாயார், பெருமாள் படத்தை தவிர வேறு எதையுமே அவர் வரையவில்லை. பலர் அவரிடம் வெவ்வேறு சுவாமி படங்களை வரைந்து கொடுக்குமாறு கேட்டுக்கொண்டாலும் அவர் அதனை நாசூக்காக மறுத்து விடுவார்’’ என கூறினார். ஓவியர் ரங்கமணியின் குடும்பத்தினர் மூதறிஞர் ராஜாஜியின் உறவினர்கள் என்பதும் குறிப்பித்தக்கது.
என்.டி. ராமாராவ் பாராட்டு: கிடாம்பி ரங்கமணி தனது ஓவியங்களை கர்நாடகாவில் தொடங்கி, ஆந்திரா, தமிழ்நாடு, தெலங்கானா என பல மாநிலங்களில் வசிக்கும் ஏராளமான திருப்பதி ஏழுமலையானின் பக்தர்களுக்கு வரைந்து கொடுத்துள்ளார். அதன்படி, இவர் வசித்து வந்த ஆந்திர மாநிலம், சித்தூரில் 1984-ம் வருடம், அப்போதைய சித்தூர் எம்பி ஜான்சி லட்சுமிக்கு சொந்தமான ராகவா தியேட்டர் மற்றும் துர்கா லாட்ஜ் ஆகியவற்றை அப்போதைய முதல்வர் என்.டி. ராமாராவ் திறந்து வைத்தார். அப்போது துர்கா லாட்ஜின் படிக்கட்டுகளின் முகப்பிலேயே 6 அடி உயரத்தில் மிக பிரம்மாண்டமாக ரங்கமணி வரைந்த ஏழுமலையானின் திருவுருவ படமும் வைக்கப்பட்டிருந்தது. அதனை பார்த்த என்.டி.ஆர், ‘ஆஹாமிக அற்புதமாக உள்ளது. யார் வரைந்தது ? என கேட்டு, ரங்கமணியை மனதார பாராட்டியுள்ளார்.
லட்சுமிபுரம் பிரசன்ன வரதராஜர் திருக்கோயில்: ஆந்திர மாநிலம் குப்பம் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதியாகும். இங்குள்ள லட்சுமிபுரம் ஒரு குக்கிராமமாக இருந்தாலும், இது பல விஐபிக்களுடன் தொடர்புடைய கிராமமாகும். மூதறிஞர் ராஜாஜியின் மனைவியான அலர்மேலு மங்கம்மாளின் சொந்த ஊராகும். இங்குள்ள பிரசன்ன வரதராஜர் கோயிலில் தான் ராஜாஜிக்கு 1897-ல் திருமணம் நடந்துள்ளது. ராஜாஜியின் உறவினர் ஓசூர் ராமசாமி ஐயங்கார். இவரது மகள்தான் மைதிலி. ஓவியர் ரங்கமணியின் துணைவியார். ராஜாஜி திருமணமாகி 2 அல்லது 3 முறை லட்சுமிபுரம் வந்ததாக அவரது வம்சாவளியினர் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த லட்சுமிபுரத்தில் தான்முதல் இந்திய பெண்கள் கிரிக்கெட்டின் கேப்டன் சாந்தா ரங்கசுவாமி பிறந்துள்ளார். முதல் அர்ஜுனா விருதினை பெற்ற முதல் பெண் விளையாட்டு வீரரும் இவரே. மேலும், பிரபல வழக்கறிஞர் டி.ஸ்ரீநிவாச ஐயங்கார், பத்திரிகையாளர் ராஜகோபால் ஐயங்கார் ஆகியோரின் சொந்த ஊரும் லட்சுமி புரம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago