தேசிய விளையாட்டு தின கொண்டாட்டம்: கல்லூரிகளில் போட்டிகளை நடத்த யுஜிசி உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து விதமான உயர்கல்வி நிறுவனங்களின் முதல்வர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

புகழ் பெற்ற ஹாக்கி வீரர் தயான் சந்த்தின் பிறந்த நாளான ஆகஸ்ட் 29-ம் தேதி, ஆண்டுதோறும் தேசிய விளையாட்டு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆகஸ்ட் 26 முதல்31-ம் தேதி வரையான காலகட்டத்தில் தடகளம் மற்றும் உள்ளரங்கம் சார்ந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்குமாறு மத்திய இளைஞர் நலன் விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் அந்த அமைச்சகம் வழங்கியுள்ளது. அதைப் பின்பற்றி விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வகையில் உயர்கல்வி நிறுவனங்களில் ஒருங்கிணைப்பு அலுவலர்களை நியமித்து பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும்.

இதுசார்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஃபிட் இந்தியா தளத்தில் பதிவேற்ற வேண்டும். கைப்பந்து, டென்னிஸ், கிரிக்கெட், பூப்பந்து, சதுரங்கம், கூடைப்பந்து, மேசைப் பந்து, கயிறுதாண்டுதல், கோ-கோ போன்றபோட்டிகளை நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE