பெண் மருத்துவர் கொலை குறித்து தாமாக முன்வந்து வழக்கு பதிவு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெண் மருத்துவரின் மரணத்துக்கு நீதி கேட்டு அரசு, தனியார் மருத்துவர்கள் அன்றாட பணிகளை புறக்கணித்து தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் லட்சக்கணக்கான நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில், கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவின் பேரில் நேற்று பிற்பகலில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ரக் ஷா பந்தனை முன்னிட்டு உச்ச நீதிமன்றத்துக்கு இன்று விடுமுறை என்பதால். தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இந்த வழக்கில் சிபிஐ நடத்தி வரும் விசாரணையில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றம், ஆர்.ஜி.கர் மருத்துவமனை நிர்வாகம், மேற்கு வங்க அரசின் செயல்பாடுகள், மாநில போலீஸாரின் முதல்கட்ட விசாரணை ஆகியவைகுறித்து உச்ச நீதிமன்றம் விரிவாக விசாரணை நடத்தும். பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவுகளை பிறப்பிக்கும்.

மருத்துவர்களின் போராட்டத்தால் நாடு முழுவதும் பல லட்சம் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாகவும் உச்ச நீதிமன்றம் உரிய அறிவுறுத்தல்களை வழங்கும் என்று உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய மருத்துவ கூட்டமைப்பின் (ஐஎம்ஏ) தலைவர் அசோகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘பெண் மருத்துவரின் மரணத்துக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் போராடி வருகின்றனர். ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்கள் சொந்த மகளை இழந்ததுபோல சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். பெண் மருத்துவரின் மரணத்தை தடுக்க தவறிவிட்டோம். ஆனால், அவரது மரணத்துக்கு நீதி கிடைப்பதில் நாம் தவறிவிட கூடாது.இதில் ஒட்டுமொத்த நாடும் இணைந்து நீதி கேட்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

பெண் மருத்துவரின் தாய் வேதனை: கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் தாய் கூறியதாவது. எனது மகள் கஷ்டப்பட்டு படித்து, ஜேஇஇ, நீட் தேர்வுகளில் வெற்றி பெற்றார். மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று மருத்துவ துறையை தேர்வு செய்தார். எம்பிபிஎஸ் முடித்த பிறகு, முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்விலும் வெற்றி பெற்றார். 2 அரசு மருத்துவ கல்லூரிகளில் அவருக்கு இடம் கிடைத்தது. வீட்டுக்கு அருகில் இருப்பதால் ஆர்.ஜி.கர் மருத்துவமனையை தேர்வு செய்தார். அந்த மருத்துவமனையை தனது வீடாகவே கருதினார். ஓய்வெடுக்கவும் நேரம் இல்லாமல் உழைத்தார். அரக்கர்களின் கொடூர செயலால் ஒரே மகளை இழந்து தவிக்கிறோம். நாங்கள் ஏழைகள்தான். ஆனாலும், எங்களுக்கு பொருளாதார உதவி எதுவும் தேவையில்லை. எங்கள் அப்பாவி மகளின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE