உ.பி, பிஹார் தொழிலாளர்கள் அடையாளங்கள் சரிபார்ப்பு: பஞ்சாப் கிராமங்களின் புதிய உத்தரவு

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: பஞ்சாபில் வேலை செய்துவரும் உ.பி, பிஹார் தொழிலாளர்களின் அடையாளங்கள் சரிபார்ப்பு உள்ளிட்ட உத்தரவுகள் கட்டாயமாகி வருகின்றன. இந்த உத்தரவுகளை அம்மாநில கிராமப் பஞ்சாயத்துக்கள் பிறப்பிக்கத் துவங்கி உள்ளன.

நாட்டின் பெரிய மாநிலமாக உத்தரப் பிரதேசமும், பின்தங்கியதாக பிஹாரும் கருதப்படுகிறது. இதனால், இம்மாநிலங்களை சேர்ந்தவர்கள் பிழைப்புக்காக வேண்டி வெளி மாநிலங்கள் செல்கின்றனர். இதுபோல், இடம்பெயர்ந்த பல்வேறு தொழிலாளர்கள் பஞ்சாபிலும் அதிகமாக உள்ளனர். இவர்களால் எழும் பிரச்சினைகளை தடுக்கவேண்டி பஞ்சாப் கிராமவாசிகள் ஒரு முக்கிய முடிவுகளை எடுக்கத் துவங்கி உள்ளனர்.

உபி, பிஹார் தொழிலாளர்கள் சொந்த விலாசங்களின் அடையாளம் சரிபார்ப்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகள் பஞ்சாபில் போடப்படுகின்றன. இந்தவகையில், பஞ்சாப்பின் மொஹாலி மாவட்டத்தின் கரார் முனிசிபல் கவுன்சிலின் கீழ் வரும் கிராமங்களில் சில உத்தரவுகள் இடப்பட்டுள்ளன.

இந்த உத்தரவில், “கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொருவரின் ஆதார் அட்டைகளில் உள்ள விலாசங்கள் சரிபார்க்கப்படும். வெளிமாநிலத்தினர் இரவு 9.00 மணிக்கு மேல் தம் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது. புகையிலை, குட்கா போன்றவற்றையும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை எழுதி அக்கிராமங்களின் முக்கிய இடங்களில் தொங்க விடப்பட்டுள்ளன. இது குறித்து 'இந்து தமிழ் திசை' இணையத்திடம் கரார் முனிசிபல் கவுன்சிலர்களின் ஒருவரான கோவிந்த்சிங் கூறும்போது, 'வெளிமாநிலவாசிகளால் பஞ்சாப் கிராமங்களின் அமைதி, சுத்தம், சுகாதார உள்ளிட்ட சூழல் கெடுவதாகப் புகார்கள் எழுகின்றன.

அரசியல் காரணங்களால், எங்கள் மாநில அரசு இதில் நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே, பஞ்சாபின் அனைத்து கிராமங்களின் அமைப்புகளும், பஞ்சாயத்துக்களும், இதுபோன்ற உத்தரவுகள் அமலாகத் துவங்கி உள்ளன. இவர்களுக்கு ஒரு அறையில் இருவருக்கும் அதிகமாகத் தங்குவதற்கும் தடை விதிக்கப்படுகிறது.' எனத் தெரிவித்தார்.

இந்த உத்தரவுகள் அமலாவதை சரிபார்க்கும் பொறுப்பு வெளிமாநிலத்தவர் தங்கும் வாடகை வீடுகளின் உரிமையாளர்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில கிராமங்களில் வெளிமாநிலவாசிகள் நிலம் விலைக்கு வாங்கலாமே தவிர அதில், வீடுகளை கட்டக் கூடாது எனவும் உத்தரவுகள் உள்ளன. இவர்களில் சிலர் தம் மாநிலங்களிலிருந்து கொண்டு வரும் இருசக்கரங்கள் உள்ளிட்டவைகளில் வாகன எண் இருப்பதில்லை. இதுபோன்றவைக்கும் தடை பஞ்சாப் கிராமங்கள் தடை விதித்துள்ளன.

இதுபோல், வெளிமாநிலவாசிகளின் அடையாளங்கள் சரிபார்ப்பு புதிதல்ல. இந்த நடவடிக்கை கடந்த 2001 இல் நாடாளுமன்றக் கட்டிடத்தில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலால் டெல்லியில் துவக்கப்பட்டது. அப்போது முதல், டெல்லியில் வந்து தங்கும் வெளிமாநிலவாசிகள் வீடுகளின் உரிமையாளர்களிடம் ஒரு விண்ணப்பத்தை சம்மந்தப்பட்ட காவல்நிலையங்கள் அளித்து விவரங்கள் கேட்கிறது.

இவற்றை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி சரிபார்க்கப்படுகின்றன. இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்யாதவர்களுக்கு வாடகைக்கு வீடுகள் கிடைப்பதில்லை. இந்தமுறை இன்றும் டெல்லியில் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE