மேற்கு வங்கத்தில் கிராம மக்கள் துன்புறுத்தியதால் காயமடைந்த யானை உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கிராம மக்களால் ஈட்டி மற்றும் தீப்பந்தங்கள் மூலம் விரட்டி, துன்புறுத்தப்பட்ட யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இது தொடர்பான சில காணொலிகளை பகிர்ந்துள்ளார். அதில் கையில் தீப்பந்தங்களை வைத்துக் கொண்டு கிராம மக்கள் சிலர் யானைகளை விரட்டியடிக்கின்றனர்.

இரண்டு குட்டிகள் உட்பட ஆறு யானைகள் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி, ஜர்க்நாம் மாவட்டத்தில் உள்ள ராஜ் காலேஜ் காலனி என்ற பகுதியில் நுழைந்துள்ளன. அப்பகுதியில் உள்ள வீட்டின் சுவர்களை அந்த யானைகள் உடைத்துள்ளன. சில மணி நேரங்களுக்கு அதில் ஒரு யானை அப்பகுதியில் இருந்த ஒரு வயதான நபரை கொன்றதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், இரும்பிலானால் ஆன ஈட்டி போன்ற கூரிய ஆயுதங்களையும், தீப்பந்தங்களையும் கொண்டு அந்த யானை கூட்டத்தை தாக்கி விரட்டியுள்ளனர். வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் ’ஹுல்லா’ குழுவினரும் கிராம மக்களுடன் சேர்ந்து யானைகளை விரட்டியதாக கூறப்படுகிறது.

கடந்த 2018ஆம் ஆண்டு ஹுல்லா குழுவினர் ஈட்டிகளையும், தீப்பந்தங்களையும் பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்தது.

இந்த நிலையில், ஹுல்லா குழுவினரால் தாக்கப்பட்ட பெண் யானை ஒன்று முதுகெலும்பில் கடுமையான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனை மீட்ட வனத்துறையினர் மருத்துவர்களைக் கொண்டு தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். எனினும் அந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

இன்னொரு ஆண் யானை கடுமையான காயங்களுடன் எழுந்து நிற்கவே முடியாத நிலையில் உள்ளது. கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி யானைகள் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE