உ.பி.யின் கோரக்பூரில் 1 மணி நேரத்தில் குழந்தைகள் உட்பட 27 பேரை கடித்த நாய்

By செய்திப்பிரிவு

கோரக்பூர்: உத்தர பிரதேசத்தில் ஒரு தெருநாய் 1 மணி நேரத்தில் குழந்தைகள் உட்பட 27 பேரை கடித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் தெரு நாய்கள் கடித்ததால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பள்ளிசெல்லும் குழந்தைகளை தெருநாய்கள் கடித்த சம்பவங்கள் ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் கடந்த 14-ம் தேதி ஒரு தெரு நாய் ஒரு மணி நேரத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 27 பேரை கடித்துக் குதறி உள்ளது. அப்பகுதியில் இருந்த சிசிடி கேமராக்களில் இது தொடர்பான காட்சிகள் பதிவாகி உள்ளன.

கோரக்பூரின் ஷாபூரின் அவாஸ் விகாஸ் காலனியில் ஆஷிஷ் யாதவ் (22), 14-ம் தேதி இரவு 9.45 மணிக்கு தனது வீட்டுக்கு முன்பு நடந்தபடியே செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கி ஓடி வந்த ஒரு தெரு நாய் தாக்குகிறது. அப்போது அவர் விரட்ட முயன்றபோதும், அந்த நாய் குறைத்தபடி கடித்தது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த அவரை சரமாரியாக கடித்துக் குதறியது. இதனால் அவருடைய கால், வாய் மற்றும் கண்ணில் இருந்து ரத்தம் வழிந்தது சிசி டிவிகேமராவில் பதிவாகி உள்ளது.

இதையடுத்து, அந்த நாய் தனது வீட்டுக்கு முன்பு நின்றிருந்த ஒரு பெண்ணின் காலில் கடித்தது. இதனால் படுகாயமடைந்த அவரது காலில் தையல் போட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கு அடுத்தபடியாக தங்கள் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுமிகளையும் அந்த நாய் தாக்கியது.

இதுகுறித்து விஜய் யாதவ் என்பவர் கூறும்போது, “நாய் கடித்ததில் படுகாயமடைந்த எனது மகன் ஆஷிஷ் யாதவை கோரக்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால் அங்கு ரேபிஸ் தடுப்பூசி இல்லை என தெரிவித்தனர்” என்றார்.

தெரு நாய் தாக்குதல் அதிகரித்து வருவது குறித்து நகராட்சி நிர்வாகத்தினரிடம் புகார் செய்தபோதும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

நாய்களுக்கு கருத்தடை: இதுகுறித்து கோரக்பூர் நகராட்சி கூடுதல் ஆணையர் துர்கேஷ் மிஸ்ரா கூறும்போது, “தெரு நாய் கடித்தது குறித்து எந்தப் புகாரும் வரவில்லை. அதேநேரம் அவ்வப்போது தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து வருகிறோம். வீட்டில் வளர்க்கப்படும் செல்ல நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறோம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE