‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ விவகாரம்: பிரதமர் மோடியை விமர்சித்த சரத் பவார்

By செய்திப்பிரிவு

மும்பை: பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து பேசி இருந்தார். இந்நிலையில், அதனை விமர்சித்துள்ளார் தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார் பிரிவு) கட்சியின் தலைவர் சரத் பவார்.

கடந்த 16-ம் தேதி அன்று ஹரியாணா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இருந்தும் மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு தேர்தல் எப்போது என அறிவிக்கவில்லை. இந்த சூழலில் சரத் பவார் தெரிவித்தது.

“நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் வேண்டுமென்ற யோசனையை பிரதமர் மோடி செங்கோட்டையில் பேசிய போது முன்வைத்தார். ஹரியாணா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் தேர்தல் எப்போது என்று அறிவிப்பு வெளியாகவில்லை.

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என பிரதமர் மோடி பேசி வரும் நிலையில், மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு தேர்தலை அறிவிக்காமல் இருப்பது முரண்பாடான செயல். பிரதமர் மோடி தனது உரையின் போது தெரிவிப்பது எதுவும் உண்மையல்ல என்பது தெரிய வருகிறது” என சரத் பவார் சனிக்கிழமை அன்று தெரிவித்தார்.

“மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது மழை காலை மற்றும் தொடர்ந்து பல பண்டிகைகள் வர உள்ளன. அதனை கருத்தில் கொண்டு இரண்டு மாநிலங்களுக்கு தேர்தல் அறிவித்துள்ளோம். ஜம்மு காஷ்மீர் தேர்தலுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகம் தேவைப்படுகின்றன. அதனை கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளோம்” என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.

இதனை சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே) கட்சியின் பொதுச்செயலாளர் ஆதித்ய தாக்கரே விமர்சித்துள்ளார். ‘மகாராஷ்டிராவில் தேர்தல் நடத்த அவர்களது பாஸ் இன்னும் அனுமதி வழங்கவில்லை’ என எண்ணுகிறேன் என அவர் தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் ஒரே நாடு, ஒரே தேர்தல் கருத்து: “அடிக்கடி நடத்தப்படும் தேர்தல் காரணமாக தேசத்தின் முன்னேற்றத்தில் தடைகள் உருவாகின்றன. அதை கருத்தில் கொண்டு ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பதை அரசியல் கட்சிகள் ஆதரிக்க வேண்டும்” என சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE