நாடு முழுவதும் மருத்துவ சேவை பாதிப்பு: கொல்கத்தா பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு தீவிரமான போராட்டம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்துக்கு நீதி கேட்டு இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் நாடு முழுவதும் மருத்துவர்கள் சனிக்கிழமை (ஆக.17) காலை முதல் 24 மணி நேர வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால் நாடு முழுவதும் மருத்துவ சேவைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தக் கொடூரச் சம்பவம் நடந்த ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு முற்றிலும் முடங்கியுள்ளது. பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சை பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதனால் மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு உடனடியாக மக்கள் நலன் கருதி பணிக்குத் திரும்பும்படி மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக நிலவரம் என்ன? - கொல்கத்தா பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் பரவலாக பல்வேறு மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிகளிலும் மருத்துவர்கள் புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் நடந்த பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தால் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்காக வந்தவர்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் செந்தில் கூறும்போது, “தமிழகம் முழுவதும் 37 இடங்களில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். மொத்தம் 25,000 மருத்துவர்கள் கலந்து கொண்டுள்ளனர். கொலையான பெண் மருத்துவருக்கு நியாயம் வேண்டும். குற்றவாளிகளை கண்டறிந்து, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவர்கள் அச்சமின்றி பணிபுரிய மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் இந்திய அளவில் வேண்டும்.

தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படுகிறது. அதனால், தனியார் மருத்துவமனைகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மருத்துவர்கள், குறிப்பாக பெண் மருத்துவர்களுக்கு பாதுகாப்பான தங்குமிடம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

கர்நாடகாவில் போராட்டம்:கர்நாடகாவில் பரவலாக மருத்துவர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் குறித்து, கர்நாடகா மாநில இந்திய மருத்துவ சங்கம் தலைவர் ஸ்ரீனிவாச அளித்த ஊடகப் பேட்டியில், “கொல்கத்தா பெண் மருத்துவருக்கு நடந்த துயரம் ஏற்றுக் கொள்ள முடியாதது. இதில் எந்த அரசியல் தலையீட்டையும் நாங்கள் விரும்பவில்லை. மருத்துவர்களும் பிற தொழில் முறை நிபுணர்களைப் போல் சிரமங்கள் நிறைந்த பணியைத்தான் செய்கிறோம். ஆகையால் எங்களுக்கு பாதுகாப்பு தேவை” என்றார்.

கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், “இது ஒரு முக்கியமான பிரச்சினை. மருத்துவமனைகள் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு முக்கியம். வரும் செவ்வாய்க்கிழமை மருத்துவர்கள், செவிலியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளேன். இப்போதுள்ள சட்டங்கள், தேவையான மேம்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கவுள்ளேன். இன்று மருத்துவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். அது அவர்களின் உரிமை. அதேவேளையில் நோயாளிகள் பாதிக்கப்படாத வண்ணம் போராடும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

அகிலேஷ் கருத்து: சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “மம்தா பானர்ஜி ஒரு பெண். அவருக்கு ஒரு பெண்ணின் வேதனை தெரியும். அவர் இந்தப் பிரச்சினையில் கோரிக்கைகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் பாஜக இதைவைத்து அரசியல் செய்யக் கூடாது.” என்று கூறியுள்ளார்.

பிரிட்டன் வாழ் இந்திய மருத்துவர்கள் கடிதம்: பிரிட்டன் வாழ் இந்திய மருத்துவர்கள் ஒரு திறந்த மடல் எழுதியுள்ளனர். அதில், “கொல்கத்தா சம்பவம் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பது மற்றும் அரசின் அக்கறையின்மையைக் காட்டுகிறது. மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது, சட்டத்தை மேம்படுத்துவது என ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதை விடுத்து மேற்கு வங்க அரசின் முதல்வர் மம்தா பானர்ஜி கூட பாதிக்கப்பட்ட பெண்ணையே கேள்விக்குள்ளாக்கும் செயல்களில் ஈடுபடுவது கவலையளிக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்கதேசத்திலும் போராட்டம்: கொல்கத்தா பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு வங்கதேசத்தின் டாக்கா பல்கலைகழகத்தில் போராட்டம் நடந்தது. “அடுத்தது நானா?!. வன்முறையை நிறுத்துங்கள். ஆல்ஃபா ஆணாக இருக்காதீர்கள். குரலை உயர்த்துங்கள் பெண்களே” என்ற கோஷங்களுடன் போராட்டம் நடந்தது.

இவ்வாறாக நாடு முழுவதும் நடக்கும் மருத்துவர்கள் போராட்டம் எல்லைகள் கடந்தும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ள நிலையில் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜக, ஏபிவிபி அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. மம்தா பானர்ஜி பதிவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. காங்கிரஸ் கட்சி சார்பில் கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலைக்கு நீதி கோரி மேற்கு வங்கத்தில் பேரணி நடத்தப்பட்டது.

சிபிஐ விசாரணைக்கு ஆஜர்: இதற்கிடையில், சம்பவம் நடந்த ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் சிபிஐ விசாரணைக்கு 2வது முறையாக இன்று (சனிக்கிழமை) ஆஜராகினார். முன்னதாக நேற்று அவரிடம் விசாரணை நடந்தது. இரவு 9.30 மணிக்கு தொடங்கிய விசாரணை அதிகாலை 3 மணி வரை நீடித்தது. இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு அவர் ஆஜராகியுள்ளார். இது ஒருபுறம் இருக்க சிபிஐ குழு ஒன்று சம்பவம் நடந்த ஆர்ஜிகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் தலையிட கோரிக்கை: இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் (ஐஎம்ஏ) தேசியத் தலைவர் டாக்டர் ஆர்.வி.அசோகன், "கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும். பிரதமர் தலையிடுவதற்கான நேரம் வந்துவிட்டது. இது தொடர்பாக நாங்கள் பிரதமருக்கு கடிதம் எழுதுவோம். அவரது தலையீட்டைக் கோருவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

பணிக்குத் திரும்புங்கள் - மத்திய அரசு கோரிக்கை: மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்பும்படி கோரியுள்ளது. இது தொடர்பான அறிக்கையில், “ஃபோர்டா, ஐஎம்ஏ, உறைவிட மருத்துவர்கள் சங்கம், அரசு மருத்துவக் கல்லூரிகள் சங்கம் என பல தரப்பினரின் கோரிக்கைகளையும் ஏற்று மத்திய அரசு மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான ஆலோசனைகள் வழங்க குழு அமைக்கப்படும் என உறுதி அளித்துள்ளது. மாநில அரசுகள் உள்பட அனைத்துவிதமான மருத்துவ சங்கத்தினருடனும் இந்த ஆலோசனைக் குழு உரிய கருத்துகளைப் பெற்று ஆலோசனை வழங்கும். எனவே மக்கள் நலன் கருதி போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

‘கடவுள் பயம்’ - கொல்கத்தா சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் சூழலில் நடிகர் மாதவன் தனது சமூகவலைதளப் பக்கத்தில், நான் என்ன சொல்வது; எப்படிச் சொல்வது என யோசித்துக் கொண்டிருக்கிறேன். நிர்பயா சம்பவம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை, வன்கொடுமைகள் தொடர்கிறது என்றால் சில கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கடவுள் மீதான அச்சம் ஊட்டப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்கு எனது ஆறுதல். இந்த துயரத்தை அவர்கள் வாழ்நாளின் மிச்சம் மீதி காலத்தில் இருந்து நீக்க ஏதும் சொல்ல முடியாது, செய்யவும் முடியாது” என்று பதிவிட்டுள்ளார்.

தேசிய மகளிர் ஆணையம் சந்தேகம்: ஆர்ஜி கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்த பகுதி அவசரமாக புனரமைக்கப்பட்டுள்ளது தடயங்களை அழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையோ என்று தேசிய மகளிர் ஆணையம் சந்தேகம் எழுப்பியுள்ளது.

போராடும் மருத்துவர்களின் 5 கோரிக்கைகள்? 1. உறைவிட மருத்துவர்களின் ( ரெசிடென்ட் டாக்டர்) பணி மற்றும் வாழ்விடச் சூழல்கள் மேம்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக 36 மணி நேர பணி என்பதில் மாற்றம் தேவை என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

2. சுகாதார பணியாளர்கள் மீதான வன்முறைகளைத் தடுக்க நாடு தழுவிய அளவில் ஒரு சட்டம் இயற்ற வேண்டும். 25 மாநிலங்களில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீதான தாக்குதலுக்கு எதிராக சட்டங்கள் உள்ளன. ஆனால், இதுவரை தண்டனைகள் வழங்கப்படவில்லை. இந்தச் சட்டங்கள் களத்தில் பெரும்பாலும் பயனவற்றவையாகவே இருக்கின்றன. அவற்றால் குற்றங்களைத் தடுக்க இயலவில்லை. சுகாதார சேவை பணியாளர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் (வன்முறை தடுப்பு மற்றும் சொத்துகள் சேதம்) மசோதா 2019 மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

3. கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும். ஆர்ஜி கர் மருத்துவமனையை சூறையாடியவர்கள் கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்க வேண்டும்.

4. விமான நிலையங்கள் மூன்றடுக்கு பாதுகாப்பு கொண்ட பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகும். அதேபோல் குறைந்தபட்சம் பெரிய மருத்துவமனைகள் மட்டுமாவது பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும். அவை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும். ஏனெனில் அவற்றுக்கு கட்டாய பாதுகாப்புக்கான உரிமை உண்டு.

5. குற்றத்தின் தன்மைக்கேற்ப கொல்கத்தாவில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு கண்ணியமான இழப்பீடு தொகை வழங்க வேண்டும் ஆகிய 5 கோரிக்கைகளை முன்வைத்து இன்று மருத்துவர்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE