டெல்லி திரும்பினார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்: விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதிப் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத், இன்று (சனிக்கிழமை) டெல்லி திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் மகளிருக்கான 50 கிலோ எடை பிரிவின் இறுதிப்போட்டியில் 100 கிராம் எடை அதிகரித்திருப்பதாக கூறி வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் வினேஷ் போகத்தின் பதக்க கனவு நொறுங்கியது. அவர், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்ததன் மூலம் குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றுவதை உறுதி செய்திருந்தார். எனினும், தகுதி நீக்கம் காரணமாக அவரால் போட்டியில் தொடர்ந்து பங்கேற்க முடியாத நிலை உருவானது.

தகுதி நீக்கத்தை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தில் வினேஷ் போகத் மேல்முறையீடு செய்தார். அதில், தனது தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், வெள்ளிப் பதக்கத்தை தனக்கு வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். மனுவை விசாரித்த நடுவர் மன்றம், கடந்த 14-ம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இறுதிப் போட்டி வரை சென்ற வினேஷ் போகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்பட பலரும் ஆறுதல் தெரிவித்திருந்தனர். விளையாட்டு வீரர்கள் பலரும் வினேஷ் போகத்துக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

உற்சாக வரவேற்பு: இந்நிலையில், இன்று டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வினேஷ் போகத்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் எம்பி தீபேந்தர் ஹூடா, சக மல்யுத்த வீரர், வீராங்கனைகளான பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் உள்ளிட்டோர் வினேஷ் போகத்தை விமான நிலையத்திற்கு வந்து வரவேற்றனர். பின்னர் அவர் வாகனத்தில் அமர வைக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். மிகவும் சோர்வாக காணப்பட்ட அவருக்கு நண்பர்கள் பலரும் ஆறுதல் வார்த்தைகளை தெரிவித்தபடி உடன் சென்றனர். எனினும், சில தருணங்களில் அவர் கண்ணீர் விட்டு அழுதார்.

வரவேற்க வந்த அதிக எண்ணிக்கையிலான ரசிகர்களைப் பார்த்து அவர் கண் கலங்கினார். கைகளைக் கூப்பி அனைவருக்கும் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்தார். “நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி! துரதிருஷ்டவசமாக நான் வெற்றிபெற முடியவில்லை” என்று செய்தியாளர்களிடம் சுருக்கமாகப் பேசினார்.

முன்னதாக, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வினேஷ் போகத்தின் சகோதரர் ஹர்விந்தர் போகத், "வினேஷ் நாடு திரும்புகிறார். அவரை வரவேற்க மக்கள் இங்கு (டெல்லி) விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். எங்கள் கிராமத்திலும் அவரை வரவேற்க மக்கள் காத்திருக்கிறார்கள். வினேஷை சந்தித்து ஊக்கப்படுத்த மக்கள் உற்சாகமாக உள்ளனர்" என்று கூறினார். ஹரியானாவின் பலாலியில் உள்ள அவரது சொந்த கிராமத்திலும் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட இருக்கிறது.

வினேஷ் போகத் வெளியிட்ட அறிக்கை: தான் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக நேற்று (ஆக. 16) வினேஷ் போகத் வெளியிட்ட எக்ஸ் பக்க அறிக்கையில், “மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தின்போது, இந்திய பெண்கள் மற்றும் நம் தேசிய கொடியின் புனிதத்தை பாதுகாக்க கடுமையாக போராடினேன். ஆனால் கடந்த ஆண்டு மே 28 அன்று முதல் தேசியக் கொடியுடன் நான் இருக்கும் புகைப்படங்களை பார்க்கும்போது அது என்னை பயமுறுத்துகிறது.

இந்த ஒலிம்பிக்கில் இந்தியக் கொடியை உயரே பறக்க வைக்க வேண்டும் என்பதும், அதன் மதிப்பை பிரதிபலிக்கும் வகையில் அதை என்னுடன் வைத்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்பதும் எனது விருப்பமாக இருந்தது. அப்படி செய்வது, மல்யுத்தத்துக்கு நடந்தவற்றையும், தேசிய கொடிக்கு நடந்தவற்றையும் கண்டிக்கும் விதமாக இருக்கும் என்று நினைத்தேன். சொல்ல இன்னும் நிறைய இருக்கிறது. ஆனால் அவற்றை சொல்ல வார்த்தைகள் ஒருபோதும் போதுமானதாக இருக்காது. நேரம் கிடைக்கும்போது நான் மீண்டும் பேசுவேன்” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

மேலும்