சென்னப்பட்ணா இடைத்தேர்தலில் போட்டி: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் அறிவிப்பு

By இரா.வினோத்


பெங்களூரு: கர்நாடக மாநிலம் சென்னப்பட்ணா சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினராக முன்னாள் முதல்வர் குமாரசாமி இருந்தார். அவர் கடந்த மக்களவைத் தேர்தலில் மண்டியா தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதையடுத்து தனது எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதனால், சென்னப்பட்ணா தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் நேற்று சென்னப்பட்ணாவுக்கு சென்று காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘எனது அரசியல் வாழ்க்கை ஆரம்பமான இடம் சென்னப்பட்ணா தான். இந்த தொகுதி மக்களே என்னை முதல் முறையாக வெற்றி பெறவைத்தார்கள். என் வாழ்வில் எல்லா நிலையிலும் சென்னப்பட்ணா மக்கள் உடன் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் பட்ட கடனை திரும்ப செலுத்த வேண்டியுள்ளது.

இந்த தொகுதியின் முன்னாள் எம்எல்ஏக்கள் போதிய அக்கறை காட்டாததால், இந்த தொகுதி வளரவில்லை. எனவே நான் தற்போதைய சாத்தனூர் தொகுதி மக்களின் அனுமதியுடன் சென்னப்பட்ணா தொகுதியில் களமிறங்க முடிவெடுத்துள்ளேன். வரும் இடைத்தேர்தலில் இந்த தொகுதியில் நானே வேட்பாளராக களமிறங்க போகிறேன். என்னால் முடிந்ததை இந்த மக்களுக்கு செய்ய விரும்புகிறேன்''என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE