எஸ்எஸ்எல்வி-டி3 ராக்கெட் பயணம் வெற்றி: 2 செயற்கைக் கோள்கள் நிலைநிறுத்தம்

By செய்திப்பிரிவு

சென்னை: எஸ்எஸ்எல்வி-டி3 ராக்கெட் மூலம்இஓஎஸ்-08 உள்ளிட்ட 2 செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.

புவி கண்காணிப்புக்காக இஸ்ரோ வடிவமைத்த அதிநவீன இஓஎஸ்-08செயற்கைக் கோள் மற்றும் ஸ்பேஸ் கிட்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் ‘எஸ்ஆர்-டெமோசாட்’ நானோ செயற்கைக் கோள் ஆகிய இரண்டையும் சிறிய ரக எஸ்எஸ்எல்வி-டி3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டது.

ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை 9.17 மணிக்கு எஸ்எஸ்எல்வி-டி3ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. 17 நிமிடங்களில், 475 கி.மீ. உயரத்தில் உள்ள திட்டமிட்ட புவிவட்ட சுற்றுப் பாதையில் 2 செயற்கைக் கோள்களும் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.

இஓஎஸ்-08 செயற்கைக் கோள் மொத்தம் 176 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுள்காலம் ஓராண்டு. இதில் எலெக்ட்ரோ ஆப்டிகல் இன்ஃப்ராரெட் பேலோடு(EOIR), குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் - ரிஃப்ளெக்டோமெட்ரி பேலோடு (GNSS-R), சிக் யுவி டோசிமீட்டர் (SiC UV Dosimeter) என்ற 3 ஆய்வு கருவிகள் உள்ளன.

ஸ்பேஸ் கிட்ஸ் ஆஃப் இந்தியா ஸ்டார்ட்-அப் நிறுவனம் வடிவமைத்த ‘எஸ்ஆர்-டெமோசாட்’ நானோ செயற்கைக் கோள் 1.2 கிலோ எடை கொண்டது. இதை நிலைநிறுத்த உலகிலேயே மிகவும் எடை குறைந்த (350 கிராம்) ‘டெப்ளாயர்’ (நிலைநிறுத்தும் சாதனம்) பயன்படுத்தப்பட்டது. விண்வெளி கதிர்வீச்சை கணக்கிடும் சிறிய ஆய்வு கருவிகள் இதில் உள்ளன. சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் பப்ளிக் ஸ்கூல் மாணவர்கள் 26 பேர் இதை வடிவமைத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE