பெண் மருத்துவர் கொலை: நாடு முழுவதும் இன்று மருத்துவர்கள் வேலைநிறுத்தம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்துக்கு நீதி கேட்டு, நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று 24 மணிநேர வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

மேற்கு வங்கம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 8-ம் தேதி பணியில் இருந்தமுதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல்வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய குற்றவாளி சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த குற்றத்தில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதன் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.

பெண் மருத்துவர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டும், மருத்துவர்களுக்கு பாதுகாப்பான பணி சூழலை ஏற்படுத்த வலியுறுத்தியும் நாடு முழுவதும் அரசுமற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் இன்று 24 மணிநேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் தலைவர் ஆர்.வி. அசோகன் கூறும்போது, ‘‘இன்று காலை 6 மணிமுதல் நாளை காலை 6 மணி வரை மருத்துவர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள். இதனால் அவசர சிகிச்சை பிரிவில் பாதிப்பு ஏற்படாது’’ என்றார்.

ஐஎம்ஏ-வில் 4 லட்சம் மருத்துவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். மேலும் சுமார் 400 மருத்துவ கல்லூரிகளும் இந்த சங்கத்தில் இணைந்துள்ளன. இந்த போராட்டத்தில் இதர மருத்துவசங்கங்களும் இணைகின்றன. பிஎம்எஸ்எப் அமைப்பின் தலைவர் டாக்டர் ஹர்ஜித் சிங் கூறியபோது, ‘‘பாதுகாப்பாற்ற சூழலில் மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர். பெண் மருத்துவர்களிடம் அச்சம், அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பணியாற்றும் இடங்களில் அவர்கள் பாதுகாப்பாக இருக்க முடியவில்லை’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE