மருத்துவமனைகளை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்க ஐஎம்ஏ தலைவர் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: “விமான நிலையங்களைப் போல நாட்டுள்ள அனைத்து மருத்துவமனைகளையும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும்; அப்போதுதான் மருத்துவர்கள் அச்சமின்றி பணியாற்ற முடியும்” என்று இந்திய மருத்துவக் கழகத்தின் (ஐஎம்ஏ) தலைவர் மருத்துவர் ஆர்.வி. அசோகன் வலியுறுத்தியுள்ளார்.

கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாடு தழுவிய அளவில் அவசரமில்லாத மருத்துவ சேவைகளை 24 மணிநேரத்துக்கு (சனிக்கிழமை காலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை) நிறுத்தி வைப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது ஐஎம்ஏவின் ஐந்து தீர்மானங்களில் ஒன்று.

இது குறித்து டாக்டர் அசோகன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "விமான நிலையங்கள் மூன்றடுக்கு பாதுகாப்பு கொண்ட பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகும். அதேபோல் குறைந்தபட்சம் பெரிய மருத்துவமனைகள் மட்டுமாவது பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும். அவை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும். ஏனெனில் அவற்றுக்கு கட்டாய பாதுகாப்புக்கான உரிமை உண்டு.

இரண்டாவதாக, சுகாதார பணியாளர்கள் மீதான வன்முறைகளைத் தடுக்க நாடு தழுவிய அளவில் ஒரு சட்டம் இயற்ற வேண்டும். 25 மாநிலங்களில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீதான தாக்குதலுக்கு எதிராக சட்டங்கள் உள்ளன. ஆனால், இதுவரை தண்டனைகள் வழங்கப்படவில்லை. இந்தச் சட்டங்கள் களத்தில் பெரும்பாலும் பயனவற்றவையாகவே இருக்கின்றன. அவற்றால் குற்றங்களைத் தடுக்க இயலவில்லை.

சுகாதார சேவை பணியாளர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் (வன்முறை தடுப்பு மற்றும் சொத்துகள் சேதம்) மசோதா 2019 மறுபரிசீலனை செய்யும்படி அரசுக்கு நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம். எங்களது கோரிக்கைகளில் ஒன்று குற்றத்தின் தன்மைக்கேற்ப கொல்கத்தாவில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு கண்ணியமான இழப்பீடு தொகை வழங்க வேண்டும். அதேபோல, கண்ணியமான, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்று ஐஎம்ஏ வலியுறுத்தி வருகிறது.

எங்களது ஐந்தாவது மற்றும் கடைசி கோரிக்கை, உறைவிட மருத்துவர்களின் வேலை நேரம் மற்றும் அவர்களின் பணி நிலைமைகளை பற்றியது. அந்த உறைவிட மருத்துவர் (கொல்கத்தாவில் பாதிக்கப்பட்டவர்) தொடர்ந்து 36 மணி நேரம் பணியில் இருந்துள்ளார். இது நியாயமா? ஒரு மருத்துவர் எவ்வளவு நேரம் பணியில் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். ஒரு மனிதனால் 8 மணி நேரம் அல்லது 12 மணி நேரம் வேலைசெய்ய முடியும். 36 மணி நேரம் வேலை செய்ய முடியுமா? நிச்சயம் தவறுகள் நடக்கும். ஆனால், அது மருத்துவருக்கும், நோயாளிகளுக்கும் நல்லதில்லை" என்று அசோகன் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE