வங்கதேசத்தில் சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்வதாக பிரதமர் மோடியிடம் முகமது யூனுஸ் உறுதி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: வங்கதேசத்தில் வாழும் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாக்கப்படுவார்கள் என்று அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் உறுதி அளித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "வங்கதேச அரசின் தலைமை ஆலோசகர் பேராசிரியர் முஹம்மது யூனுஸ் இடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. வங்கதேசத்தில் நிலவும் சூழ்நிலை தொடர்பாக கருத்துகளை பரிமாறிக்கொண்டோம். ஜனநாயக, நிலையான, அமைதியான மற்றும் முற்போக்கான வங்கதேசத்துக்கு இந்தியாவின் ஆதரவை மீண்டும் வலியுறுத்தினேன். வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் மற்றும் அனைத்து சிறுபான்மையினரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என அவர் என்னிடம் கூறினார்" என தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக ஏற்பட்ட போராட்டத்தை அடுத்து அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா கடந்த 5-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பி வந்தார். இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் கடந்த 8ம் தேதி இடைக்கால அரசு அந்நாட்டில் பதவியேற்றது.

இதனிடையே, வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள், பவுத்தர்கள் உள்ளிட்ட மத சிறுபான்மையினர் மீது இஸ்லாமியர்கள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் இந்துக்கள் 5 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்துக்களுக்குச் சொந்தமான கோயில்கள், வீடுகள், அலுவலகங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து, வங்கதேசத்தில் வாழும் இந்துக்கள் ஒன்றுகூடி தொடர் போராட்டங்களை நாட்டின் பல பகுதிகளில் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக இந்தியா, அமெரிக்கா உள்பட பல வெளிநாடுகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன. சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று வங்கதேசத்துக்கு தொடர் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன.

இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றுக்கொண்டபோது அவருக்கு தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேசத்தின் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

வியாழக்கிழமை தனது சுதந்திர தின உரையின் போதும் வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்தும் மோடி கவலை தெரிவித்தார். “ஓர் அண்டை நாடாக, வங்கதேசத்தில் என்ன நடந்தாலும் அது குறித்த கவலையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அங்கு நிலைமை விரைவில் இயல்பு நிலைக்கு வரும் என நம்புகிறேன். குறிப்பாக, அங்குள்ள இந்துகள் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்பதில் 140 கோடி இந்தியர்களும் கவலை கொண்டுள்ளனர்" என்று பிரதமர் மோடி பேசினார்.

இந்நிலையில், வங்கதேச இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு தெரிவித்திருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE