ஜம்மு காஷ்மீரில் செப்.18 தொடங்கி 3 கட்டங்களாக தேர்தல்; ஹரியாணாவில் அக்.1-ல் வாக்குப் பதிவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், ஹரியாணா மாநிலத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். அதன்படி, ஜம்மு காஷ்மீருக்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 என மூன்று கட்டங்களாகவும், ஹரியாணாவுக்கு அக்டோபர் 1-ம் தேதி ஒரே கட்டமாகவும் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கிறது. அக்டோபர் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

இது குறித்து வெள்ளிக்கிழமை பிற்பகலில் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியதாவது, "2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் என்பது உலக அளவில் நடந்த மிகப் பெரிய தேர்தல் நடைமுறை செயல்பாடாகும். அது அமைதியாகவும், வெற்றிகரமாகவும் நடந்து முடிந்தது. உலகின் அனைத்து ஜனநாயகத்துக்குமான மிகவும் வலிமையான ஜனநாயகப் பரப்பை அந்தத் தேர்தல் உருவாக்கியுள்ளது. எந்த விதமான வன்முறையுமின்றி அமைதியாக தேர்தல் நடந்தது. ஒட்டுமொத்த தேசமும் தேர்தல் திருவிழாவைக் கொண்டாடியது. நாம் சில சாதனைகளையும் படைத்துள்ளோம். முதல் முறையாக உலக அளவில் அதிக அளவில் வாக்குப்பதிவு நடந்துள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய சமீபத்தில் நாங்கள் ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியாணாவுக்கு சென்றிருந்தோம். அங்கு மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டனர். தேர்தல் நடைமுறைகளில் பங்கேற்க விரும்பினர். அங்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். மக்களவைத் தேர்தலின் போது, ஜம்மு காஷ்மீரில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தது அவர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதை அறிவிப்பத்தோடு மட்டுமின்றி, மாற்றத்தின் ஒரு பகுதியாக மாறி தங்களின் குரலினை உயர்த்த விரும்புகின்றனர் என்பதற்கு சான்றாக இருந்தது. ஜனநாயகத்தின் இந்தப் பார்வை என்பது மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதையேக் காட்டுகிறது.

ஜம்மு காஷ்மீரில் 90 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. அவற்றில் 74 பொதுத் தொகுதிகள், பட்டியில் பிரிவினருக்கான தனித்தொகுதி 7, பட்டியல் - பழங்குடிகளுக்கானது 9. ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 87.09 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 44.46 ஆண்கள், 42.62 பெண்கள். 3.71 லட்சம் பேர் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர். 20.7 லட்சம் இளம் வாக்காளர்கள் உள்ளனர். அங்கு அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 19-ம் தேதி நிறைவடைய இருக்கிறது. ஆகஸ்ட் 20-ம் தேதி வாக்களர் பட்டியல் வெளியிடப்படும்.

ஹரியாணாவில் மொத்தம் 90 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அவற்றில் 73 பொதுத் தொகுதிகள், தனித்தொகுதி எஸ்.சி - 17. மாநிலத்தில் மொத்தம் 2.01 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஆண்கள் 1.06 கோடி, பெண்கள் 0.95 கோடி. 40.95 லட்சம் பேர் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 27-ம் தேதி வெளியிடப்படுகிறது" என்றார்.

தேர்தல் அட்டவணை விபரம்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 24 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவுகான மனு தாக்கல் ஆக.20-ம் தேதி தொடங்குகிறது. மனு தாக்கலுக்கான கடைசி நாள் ஆகஸ்ட் 27. தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் ஆகஸ்ட் 28-ம் தேதி பரிசீலனை செய்யப்படுகின்றன. மனுக்களைத் திரும்பப் பெற ஆகஸ்ட் 30-ம் தேதி கடைசி நாள். வாக்குப்பதிவு செப்டம்பர் 18-ம் தேதி நடைபெறும்.

இரண்டாம் கட்டத்தில் 26 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. அதற்கான மனு தாக்கல் ஆக.29-ம் தேதி தொடங்குகிறது. மனு தாக்கல் செய்ய கடைசி நாள் செப்.5. மனுக்கள் செப்.6-ம் தேதி பரிசீலனை செய்யப்படுகின்றன. மனுக்களை செப்.9-ம் தேதிக்குள் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். வாக்குப்பதிவு நாள் - செப்டம்பர் 25.

மூன்றாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு 40 தொகுதிகளுக்கு நடக்க இருக்கிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் செப்.5-ம் தேதி தொடங்குகிறது. மனு தாக்கலுக்கான கடைசி நாள் செப்.12. மனுக்கள் செப்.13-ம் தேதி பரிசீலனை செய்யப்படுகின்றன. மனுக்களைத் திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் செப்.17. வாக்குப்பதிவு அக்டோபர் 1-ம் தேதி நடைபெற உள்ளது. மூன்று கட்டங்களுக்குமான வாக்குகள் அக்டோபர் 4-ம் தேதி எண்ணப்படுகின்றன.

ஹரியாணா மாநிலத்தின் 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேட்பு மனு தாக்கல் செப்.5-ம் தேதி தொடங்குகிறது. மனு தாக்கலுக்கான கடைசி நாள் செப்.12. மனுக்கள் செப்.13-ம் தேதி மறுபரிசீலனை செய்யப்படுகின்றன. மனுக்களை செப்.16-ம் தேதிக்குள் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். வாக்குப் பதிவு அக்டோபர் 1-ம் தேதி நடைபெற இருக்கிறது. வாக்குகள் அக்டோபர் 4-ம் தேதி எண்ணப்படுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்