இஓஎஸ்-08 செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தம்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்

By செய்திப்பிரிவு

ஸ்ரீஹரிகோட்டா: எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் மூலம் இன்று (வெள்ளிக்கிழமை) விண்ணில் செலுத்தப்பட்ட புவி கண்காணிப்புக்கான அதிநவீன இஓஎஸ்-08 உட்பட 2 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக அதற்கான புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

ராக்கெட் ஏவப்பட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சோம்நாத் கூறியதாவது: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக வடிவமைத்த அதிநவீன இஓஎஸ்-08 எனும் செயற்கைக்கோள் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் மூலம் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இப்போது அந்த செயற்கைக்கோள் அதற்கான புவி சுற்றுவட்டப் பாதையில் சரியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதுவரை எல்லாம் திட்டமிட்டபடியே நடந்துள்ளன. தொடர்ந்து செயற்கைக்கோளின் செயல்பாடு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இஓஎஸ்-08 செயற்கைக்கோள் சிறப்பாக செயல்படும். இதற்கான உழைப்பைச் செலுத்திய எஸ்எஸ்எல்வி டி-3 குழுவினருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எஸ்எஸ்எல்வி ரக ராக்கெட்டுகளில் இது மூன்றாவது உந்து வாகனம், இன்றைய வெற்றி மூலம் எஸ்எஸ்எல்வி வளர்ச்சி நிறைவுபெற்றது என்று அறிவிக்கலாம்.” என்றார்.

இஓஎஸ்-08 சிறப்பம்சங்கள்: புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இஓஎஸ்-08 எனும் இந்த செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்துள்ளது. இஓஎஸ்-08 செயற்கைக்கோள் மொத்தம் 176 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் ஓராண்டாகும். இது தரையில் இருந்து 475 கி.மீ.தொலைவில் உள்ள புவிவட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதில் எலக்ட்ரோ ஆப்டிகல் இன்ப்ராரெட் பேலோடு (EOIR), குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்-ரிப்ளெக்டோமெட்ரி பேலோடு (GNSS-R) மற்றும் சிக் யுவி டோசிமீட்டர் (SiC UVDosimeter) ஆகிய 3 ஆய்வுசாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இஒஐஆர் கருவி பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, இரவில் துல்லியமான படம் எடுக்க உதவிசெய்யும்.

இதேபோல், ஜிஎன்எஸ்எஸ்-ஆர் கருவி கடல் மேற்பரப்பு காற்றின் செயல்பாடு, மண்ணின் ஈரப்பதம் மதிப்பீடு, நீர்நிலைகளை கண்டறிதல் போன்ற பணிகளுக்கு பயன்படும். சிக் யுவி டோசிமீட்டர் விண்ணில் யுவி கதிர்வீச்சு அளவைகண்காணித்து எச்சரிக்கை அளிக்கும். இது மனிதர்களைவிண்ணுக்கும் அனுப்பும் ககன்யான் திட்ட விண்கலத்திலும் இடம் பெற உள்ளது.

குலசேகரப்பட்டினம் குறித்து தகவல்: தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார் சோம்நாத். அப்போது அவர், குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள பணிகள் இரண்டாண்டுகளில் முடிவுபெறும் என்று தெரிவித்ததாகத் தெரிகிறது.

திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரன்பட்டினத்தில் 2,233 ஏக்கரில் இஸ்ரோ சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது. இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, சொந்த நாட்டு செயற்கைகோள்களை மட்டுமின்றி, பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த செயற்கைகோள்களையும் குறைந்த கட்டணத்தில் விண்ணில் செலுத்தி வருகிறது. இதனால் பல நாடுகள் தொடர்ந்து தங்கள் செயற்கைகோள்களை ஏவ இந்தியாவை நாடி வருகின்றன.

தற்போது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ராக்கெட்டுகளை இஸ்ரோ ஏவி வருகிறது. தேவை அதிகரித்துள்ளதால் கூடுதல் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான வேறொரு ஏற்ற இடத்தை இஸ்ரோ தேடியது.

பொதுவாக ராக்கெட் ஏவுதளம் அமையும் பகுதியானது, கடற்கரையாகவும், காற்றின் வேகம் மணிக்கு 30 கி.மீ.க்கு குறைவாகவும், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகாத பகுதியாகவும், புயல், மின்னல் மற்றும் மழையின் தாக்கம் குறைவாக உள்ள பகுதியாகவும் இருக்க வேண்டும். நிலையான காலநிலையும், நல்ல வெளிச்சம், குறைந்த பனி மற்றும் மேகமூட்டம் உள்ள பகுதியாக இருப்பதும் அவசியம். மேலும், நிலநடுக்கோட்டுக்கு அருகேயும், கிழக்கு கடற்கரையை ஒட்டியும் இருக்கும் வகையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் இடத்தை தேடினர்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் கடற்கரை பகுதி இந்த அம்சங்கள் அனைத்தும் நிறைந்த பகுதியாக கண்டறியப்பட்டது. கிழக்கு கடற்கரையை ஒட்டியுள்ள குலசேகரன்பட்டினம் பகுதியில் நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க இஸ்ரோ முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இங்கு சுமார் 2,300 ஏக்கர் நிலம் தமிழக அரசு சார்பில் கையகப்படுத்தப்பட்டு இஸ்ரோவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்போது அங்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள பணிகள் இரண்டாண்டுகளில் முடிவுபெறும் எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE