ஆகஸ்ட் 17-ல் நாடு முழுவதும் டாக்டர்கள் வேலை நிறுத்தம்: இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 17 அன்று 24 மணி நேரம் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து இந்திய மருத்துவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “கொல்கத்தா ஆர்.ஜி. மருத்துவ கல்லூரியில் நடந்த கொடூர குற்றம் மற்றும் சுதந்திர தினத்தன்று போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் ஆகஸ்ட் 17 அன்று காலை 6 மணி முதல் ஆகஸ்ட் 18 ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை 24 மணி நேரம் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்.

அதே நேரம் அனைத்து விதமான அத்தியாவசிய சேவைகளும் செயல்படும். அவசர வழக்குகளை மருத்துவர்கள் பார்ப்பார்கள். ஆனால் வழக்கமான வெளிப்புற நோயாளிகளுக்கான சிகிச்சைகள் செயல்படாது மற்றும் அவரசம் இல்லாத அறுவை சிகிச்சைகள் செய்யப்படாது.

நவீன மருத்துவர்கள் தங்கள் சேவைகளை வழங்கும் அனைத்து துறைகளிலும் இந்த பணி புறக்கணிப்பு நடைபெறும். மருத்துவர்களின் நியாயமான போராட்டத்துக்கு தேசத்தின் ஆதரவை இந்திய மருத்துவர்கள் சங்கம் கோருகிறது” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நடந்தது என்ன? - மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் பயிற்சி மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில், நீதி கேட்டு மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். மேலும், இந்த கொலை வழக்கு விசாரணையை சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE