அயோத்தி ராமர் கோயில் வளாகத்தில் இருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள 3,800 விளக்கு திருட்டு: போலீஸார் தீவிர விசாரணை

By செய்திப்பிரிவு

அயோத்தி: உத்தர பிரதேச மாநிலம்அயோத்தியில் அமைக்கப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கோயிலை சென்றடைவதற்காக பக்திப் பாதை, ராமர் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏராளமான மூங்கில் விளக்குகளால் இந்தப் பாதைகள் அலங்கரிக் கப்பட்டுள்ளன.

இந்த விளக்குகளை பராமரிக்கும் நிறுவனத்தைச் சேர்ந்த சேகர் சர்மா என்பவர்கடந்த மாதம் இப்பகுதிக்கு வந்தபோது அங்கிருந்த ஏராளமான விளக்குகள் திருடப்பட்டிருப்பதைக் கண்டறிந்தார்.

அங்கிருந்த 3,800 மின் விளக்குகள், 36 கோபோ புரஜெக்டர் விளக்குகள் ஆகியவை திருடப்பட்டு இருப்பதாகத் தெரியவந்தது. இதையடுத்து அயோத்தி போலீஸில் சேகர் சர்மா கடந்த 9-ம் தேதி புகார் அளித்துள்ளார். திருடு போன விளக்குகளின் மதிப்பு ரூ.50 லட்சம் எனத் தெரியவந்துள்ளது.

இதையடுத்து முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து அயோத்தி போலீஸ் எஸ்.பி. ராஜ் கரண் நய்யார் கூறியதாவது:

கடந்த மே மாதம் முதலே இப்பகுதியில் விளக்குகள்திருடப்பட்டு வருவதை சேகர் சர்மா கண்டறிந்துள்ளார். கடந்த மாதம் சோதனை செய்தபோது 3,800 விளக்குகள், புரஜெக்டர் விளக்குகள் திருடப்பட்டிருப்பதை அறிந்து போலீஸில் புகார் கொடுத்துள்ளார். விளக்குகளை திருடியது யார் என்பதை விரைவில் கண்டறிவோம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தப் பாதைகளில் 6,400 மூங்கில் விளக்குகளும், 96 கோபோ புரஜெக்டர் விளக்குகளும் பொருத்தப்பட்டிருந்தன. இதனிடையே, குற்றவாளிகளை உடனடியாக கண்டறிந்து கைது செய்யுமாறு போலீஸாருக்கு, அயோத்தி ஆட்சியர் சந்திர விஜய் சிங் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE