கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிபிஐ விசாரணை தொடக்கம்

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: பெண் பயிற்சி மருத்துவர் கொல்லப் பட்ட வழக்கை விசாரிப்பதற்காக கொல்கத்தா சென்றடைந்த சிபிஐ அதிகாரிகள் குழு, சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணையை தொடங்கியது.

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசுமருத்துவக் கல்லூரி- மருத்துவமனை செயல்படுகிறது. இதில் கடந்த 8-ம் தேதி இரவுப் பணியில் இருந்த முதுநிலை மருத்துவமாணவி (31) கடந்த 9-ம் தேதிசடலமாக மீட்கப்பட்டார். அவர்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர். இதுதொடர்பாக காவல் துறையோடு இணைந்து பணியாற்றும் தன்னார்வலர் சஞ்சய் ராய் (33) கைது செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலையை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புறநோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இதனிடையே, பெண் மருத்துவரின் பெற்றோர் உட்பட பல்வேறு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்குமாறு நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

மேலும் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் வசம் உடனடியாக ஒப்படைக்குமாறும் கொல்கத்தா காவல் துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரிப்பதற்காக டெல்லியைச் சேர்ந்த சிபிஐ அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழு நேற்று கொல்கத்தா சென்றடைந்தது. இக்குழுவில் தடயவியல் மற்றும்மருத்துவ நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர்.

கொல்கத்தா சென்றடைந்த அவர்கள் 3 குழுவாக பிரிந்தனர். இதில் ஒரு குழு சம்பவம் நடந்த மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தது. அப்போது சம்பவ நாளில் பணியில் இருந்தவர்களிடம் அக்குழுவினர் விசாரணை நடத்தினர்.

மற்றொரு குழுவினர், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயை காவலில் எடுப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். 3-வது குழு கொல்கத்தா காவல் துறை அலுவலகத்துக்கு சென்று இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்றனர்.

இதனிடையே, பெண் பயிற்சி மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர். எனவே, அவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா, முதலில் தற்கொலை என தகவல் வெளியானது ஏன் என்பன உட்பட பல்வேறு கோணங்களில் இந்த வழக்கை விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது சமூக வலைதளப் பதிவில்,‘‘பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்குவதற்கு பதிலாக குற்றம் சாட்டப்பட்டவரை காப்பாற்றும் முயற்சியானது, மருத்துவமனை மீதும்மாநில நிர்வாகம் மீதும் கேள்விஎழுப்புகிறது’’ என்று தெரிவித்து உள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE