‘தலா ரூ.3 லட்சத்தில் 450 ஹெலிபேடுகள்...’ - ஒடிசாவில் வி.கே.பாண்டியனுக்கு எதிராக விசாரணை

By செய்திப்பிரிவு

புவனேஸ்வர்: ஒடிசாவில் முந்தைய பிஜு ஜனதா தளம் ஆட்சியின்போது நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளராக இருந்த வி.கே.பாண்டியன் அரசு ஹெலிகாப்டர்களை அதிக அளவில் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக தற்போதைய பாஜக அரசு விசாரணை நடத்தி வருகிறது.

மதுரையை சேர்ந்த வி.கே.பாண்டியன் 2000-ம் ஆண்டு பேட்ச் பஞ்சாப் கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். தனது திருமணத்துக்கு பிறகு தனது பணியை ஒடிசாவுக்கு மாற்றிக்கொண்ட பாண்டியன், தனது நிர்வாகத் திறமையால் ஒடிசா மக்களிடம் நற்பெயர் பெற்றார். இதனால், முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் நேரடிச் செயலாளராக நியமிக்கப்பட்ட அவர், நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமான அதிகாரியானர்.

நவீன் பட்நாயக்கின் நிழலாகத் தொடர்ந்த பாண்டியன் கடந்த அக்டோபரில் ஐஏஎஸ் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். பிறகு பிஜேடியில் இணைந்த அவரிடம் மக்களவை, சட்டப்பேரவை தேர்தல் பொறுப்புகளை நவீன் பட்நாயக் ஒப்படைத்தார். இவர் தலைமையில் தேர்தலை சந்தித்த பிஜு ஜனதா தளம் தோல்வியை சந்தித்தது. இதனால், ஒடிசாவில் சுமார் 24 வருடங்களாக தொடர்ந்து 5 முறை ஆட்சி செய்த நவீன் பட்நாயக் ஆட்சியை இழந்தார்.

முன்னதாக, நவீன் பட்நாயக் உடன் நெருக்கமாக இருந்தபோது வி.கே.பாண்டியன் அரசு ஹெலிகாப்டர்களை அதிக அளவில் பயன்படுத்தியது சர்ச்சையானது. அரசு ஹெலிகாப்டர்கள் ஒடிசா முழுவதும் சென்ற அவர், மக்களை சந்திக்கும் திட்டத்தை நடத்தினார். மக்களின் குறைகளை கேட்பதற்காக நவீன் பட்நாயக் சார்பில் வி.கே.பாண்டியன் அரசு ஹெலிகாப்டர்களை பயன்படுத்தியதாக அப்போது பிஜு ஜனதா தளம் சார்பில் சொல்லப்பட்டது. எனினும், எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை தேர்தல் பிரச்சாரத்தின்போது கடுமையாக முன்னிறுத்தின.

இந்நிலையில், தற்போது ஆட்சி மாற்றத்துக்கு பிறகு இந்த விவகாரம் தொடர்பாக பாஜக அரசு விசாரணை செய்யத் தொடங்கியுள்ளது. ஒடிசாவின் வர்த்தகம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிபூதி பூஷன் ஜெனா இதுதொடர்பாக பேசுகையில், “வி.கே.பாண்டியன் அரசு ஹெலிகாப்டர்களை அதிக அளவில் பயன்படுத்தியது குறித்து மாநில அரசு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் அரசு கருவூலத்தை தவறாக பயன்படுத்தியது தெரியவந்தால் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

பிப்ரவரி 2020 முதல் டிசம்பர் 2023க்கு இடையில் வி.கே.பாண்டியன் அடிக்கடி ஹெலிகாப்டர் மூலம் மாநிலம் முழுவதும் பயணம் செய்துள்ளார். இதுகுறித்து அரசை நோக்கி மக்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர். எனவே விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டு மட்டும் ஒடிசாவின் 30 மாவட்டங்களில் 190 இடங்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்றுள்ளார் பாண்டியன். மக்களின் குறைகளை கேட்பதற்காக பாண்டியன் இந்த பயணங்களை மேற்கொண்டதாக முந்தைய பிஜு ஜனதா அரசு தெரிவித்திருந்தது. எனினும், ஹெலிகாப்டர் பயணங்களுக்கு செலவிடப்பட்ட தொகையை அரசு வெளிப்படுத்தவில்லை.

வி.கே.பாண்டியன் சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்க, ஒடிஷா முழுவதும் 450 ஹெலிபேடுகள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு ஹெலிபேடு அமைப்பதற்கும் சுமார் ரூ.3 லட்சம் செலவு செய்யப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஹெலிபேடு அமைக்க யார் அனுமதி கொடுத்தது, அதற்கான செலவுகள் எப்படி செய்யப்பட்டது என்பது தொடர்பாக தற்போது விசாரணை நடந்துவருகிறது. விதிகளை மீறியது தெரியவந்தால் நடவடிக்கை பாயும்” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்