“இந்திய பங்குச் சந்தைகள் குறித்து சந்தேகங்களைப் பரப்புவதா?” - ராகுலுக்கு பாஜக கண்டனம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: “அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் இந்திய பங்குச் சந்தைகளின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குவதா?” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

அதானி குழுமத்துக்கும், பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியமான ‘செபி’யின் தலைவருக்கும் இடையிலான தொடர்பு குறித்து அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரம் அற்றவை. உண்மைக்கு புறம்பான தகவல்கள் அதில் முன்வைக்கப்பட்டுள்ளன’ என்று அதானி குழுமம் மறுப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவரான அமித் மாள்வியா எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இப்போது வெளிப்படையாகவே இந்திய பங்குச் சந்தைகள் குறித்து சந்தேகங்களை எழுப்பி அதன் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறார். நமது பொருளாதாரத்தின் மீதான நன்நம்பிக்கையை குறைத்து மதிப்பிடும் இந்த அப்பட்டமான முயற்சி ராகுல் காந்தியின் எண்ணம் என்னவென்பதை வெளிப்படையாகக் காட்டுகிறது. அவரது எண்ணம் இந்தியாவை சிதைப்பதைத் தவிர வேறில்லை என்பது இதன்மூலம் புலப்படுகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

ஹிண்டன்பர்க் கடந்த 10-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், “அதானி குழுமம் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் செபி தலைவர் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகியோர் பங்குகளை கொண்டிருந்தனர். குறிப்பாக, மொரீஷியஸ் மற்றும் பெர்முடா நாடுகளில் கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி தொடர்புடைய போலி நிறுவனத்தில் செபியின் தலைவர் மாதபியும், அவரது கணவரும் பங்குகள் வைத்திருந்தனர்.

இதன் காரணமாக, அதானியின் சந்தேகத்துக்குரிய பங்குதார நிறுவனங்கள் மீது செபி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. செபியின் தலைவராக மாதபி புரியின் செயல்பாடு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதானி குழுமம் மீதான செபியின் விசாரணை குறித்து முழுமையாக ஆய்வு நடத்தப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகளுக்கு அதானி குழுமம் நேற்று மறுப்பு வெளியிட்டது.

இதனை முன்வைத்து, “சில்லறை முதலீட்டாளர்களின் சொத்துகளை பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள செபியின் நேர்மை, அதன் தலைவர் மீதான குற்றச்சாட்டுகளால் கடும் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது.” என்று ராகுல் காந்தி குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் அமித் மாள்வியா ராகுல் காந்திக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜனவரி சர்ச்சை: முன்னதாக, கடந்த 2023 ஜனவரி மாதம் அதானி குழுமம் பங்கு மோசடி உட்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டியது. இதைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. அதானி குழுமத்துக்கு ரூ.11 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. அதானி நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டனர்.

உச்ச நீதிமன்றத்தில் ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்றம், செபியின் விதிமுறைகள் குறித்தும், பங்குச் சந்தை கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி சப்ரே தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அமைத்தது. அந்த குழு எந்த முறைகேடும் இல்லை என்று கூறியது.

அதனை சுட்டிக்காட்டியுள்ள அமித் மாள்வியா, “உச்ச நீதிமன்றம் அமைத்த நிபுணர் குழுவின் அறிக்கை முறைகேடுகள் ஏதும் நடைபெறவில்லை என்று சுட்டிக்காட்டியும் ராகுல் காந்தி மீண்டும் சந்தேகம் எழுப்பியுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

21 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

மேலும்