ஹிண்டன்பர்க் அறிக்கை காங்கிரஸ் கட்சியின் சதி: பாஜக மூத்த தலைவர் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: “இந்தியாவின் வளர்ச்சியை சீர்குலைக்கும் நோக்கில், காங்கிரஸுடன் சதி செய்து ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டுள்ளது” என்று பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியமான செபியின் தலைவர் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகிய இருவரும் அதானி குழுமம் தொடர்புடைய நிறுவனங்களில் பெரும் பங்குகளைக் கொண்டிருந்தனர் என்றும் இதன் காரணமாகவே, அதானி குழுமம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் செபி எடுக்கவில்லை என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டது.

இவ்விவகாரத்தை மாபெரும் ஊழல் என்று விமர்சித்துள்ள காங்கிரஸ், இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு கோரிக்கை வைத்துள்ளது. இந்நிலையில், ஹிண்டன்பர்க் அறிக்கை காங்கிரஸின் சதி திட்டம் என்று பாஜக தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். பாஜக தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகர் நேற்று எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:

உலகின் வலுவான நிதிக் கட்டமைப்பையும் வேகமாக வளரும் பொருளாதாரத்தையும் கொண்ட நாடான இந்தியாவின் வளர்ச்சியை சீர்குலைக்கவும் குழப்பத்தை ஏற்படுத்தவும் ஹிண்டன்பர்க் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

செபியின் மீது ஹிண்டன்பர்க் நடத்தியிருக்கும் இந்தத் தாக்குதலில் காங்கிரஸும் கூட்டு. ஒரு சிலஉண்மைகளைக் கூறி, பல பொய்களை அடுக்கும் காங்கிரஸ் பாணியிலேயே இந்த அறிக்கை உள்ளது.நான் ஏற்கெனவே பலமுறை கூறியுள்ளேன். காங்கிரஸின் உதவியுடன் பல சர்வதேச அமைப்புகள்இந்தியாவின் வளர்ச்சியை குலைக்க முயன்று வருகின்றன. நாம் ஒரு போதும் இதை அனுமதிக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE