அதானி குழும நிறுவனத்தில் முதலீடா? - ஹிண்டன்பர்க் புகாருக்கு செபி தலைவர் மறுப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அதானி குழுமத்துக்கும், பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியமான ‘செபி’யின் தலைவருக்கும் இடையிலான தொடர்பு குறித்து அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரம் அற்றவை. உண்மைக்கு புறம்பான தகவல்கள் அதில் முன்வைக்கப்பட்டுள்ளன’ என்று அதானி குழுமம் மறுப்பு வெளியிட்டுள்ளது.

ஹிண்டன்பர்க் கடந்த 10-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், “அதானி குழுமம் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் செபி தலைவர் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகியோர் பங்குகளை கொண்டிருந்தனர். குறிப்பாக, மொரீஷியஸ் மற்றும் பெர்முடா நாடுகளில் கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி தொடர்புடைய போலி நிறுவனத்தில் செபியின் தலைவர் மாதபியும், அவரது கணவரும் பங்குகள் வைத்திருந்தனர்.

இதன் காரணமாக, அதானியின் சந்தேகத்துக்குரிய பங்குதார நிறுவனங்கள் மீது செபி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. செபியின் தலைவராக மாதபி புரியின் செயல்பாடு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதானி குழுமம் மீதான செபியின் விசாரணை குறித்து முழுமையாக ஆய்வு நடத்தப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகளுக்கு அதானி குழுமம் நேற்று மறுப்பு வெளியிட்டுள்ளது.

உண்மைக்கு புறம்பான அறிக்கை: “ஹிண்டன்பர்க்கின் அறிக்கை மிகவும் தவறானது. தங்கள் சுயலாபத்துக்காக, பொதுவெளியில் உள்ள தகவல்களை திரட்டி, அவற்றின் உண்மையை ஆராயாமல் உள்நோக்கத்துடன் அந்த அறிக்கையை ஹிண்டன்பர்க் உருவாக்கிஉள்ளது.

ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகளை நாங்கள் முழுமையாக மறுக்கிறோம். எங்களது அனைத்து வெளிநாட்டு முதலீடுகளும், பங்குகளும் வெளிப்படைத் தன்மையுடன் உள்ளன.

ஹிண்டன்பர்க்கின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தால் முழுமையாக விசாரிக்கப்பட்டு, அடிப்படை ஆதாரம் அற்றவை என்று நிராகரிக்கப்பட்டவை” என்று அதானி குழுமம் குறிப்பிட்டுள்ளது.

தங்கள் மீதான ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகளை மறுத்து செபியின் தலைவர் மாதபி புரியும், அவரது கணவரும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில்,‘ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை. எங்களுடைய வாழ்க்கையும், நிதி பரிமாற்றங்களும் திறந்த புத்தகம்போல வெளிப்படையானவை. ஹிண்டன்பர்க்கின் முந்தைய அறிக்கை தொடர்பாக செபி நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதற்கு பழிவாங்கும் நோக்கில், செபியின் பெயரை கெடுக்கும் வகையில் தற்போது ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது’ என்று தெரிவித்துள்ளனர்.

ரூ.11 லட்சம் கோடி இழப்பு: 2023 ஜனவரி மாதம் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம், அதானி குழுமம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அதானி குழுமம் பங்கு மோசடி உட்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டியது.

இதைத் தொடர்ந்து, அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்தது. அதானி குழுமத்துக்கு ரூ.11 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பான விசாரணை நடந்துவருகிறது. இதற்கிடையே, இந்தியபங்குச் சந்தை விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி, ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்கு செபி சில வாரங்களுக்கு முன்புநோட்டீஸ் அனுப்பியது. அதில், ‘ஹிண்டன்பர்க் நிறுவனம் தனது அறிக்கையை பொதுவெளியில் வெளியிடுவதற்கு முன்பாக கிங்டன் கேபிடல் மேனேஜ்மெண்ட் என்ற முதலீட்டு நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளது.

இதைத் தொடர்ந்து அந்நிறுவனம், அதானி குழும பங்குகளை ஷார்ட் செல்லிங் செய்து லாபம் ஈட்டியுள்ளது’ என்றும் செபி குற்றம்சாட்டியது. இந்த சூழலில், தற்போது செபியின் தலைவர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஹிண்டன்பர்க் புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கிடையே, ஹிண்டன்பர்க்கின் அறிக்கை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

‘நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும்’: ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘ஹிண்டன்பர்க்கின் முந்தைய அறிக்கை, அதானிக்கும் மோடிக்குமான நெருங்கிய தொடர்பை வெளிச்சம் போட்டு காட்டியது. இந்நிலையில், தற்போது அதானி குழுமத்துக்கும், செபி தலைவருக்கும் இடையிலான தொடர்பு குறித்து புதிய குற்றச்சாட்டுகளை ஹிண்டன்பர்க் முன்வைத்துள்ளது.

இந்தியாவின் நடுத்தர மக்கள் தங்கள் கடின உழைப்பு மூலம் ஈட்டிய பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளனர். தங்களை செபி பாதுகாக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர். ஆனால், தற்போது செபியின் தலைவர் மீது மாபெரும் ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தப்படுவது அவசியம்’ என்று பதிவிட்டுள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மகுவா மொய்த்ரா வெளியிட்ட பதிவில், ‘அதானி விவகாரத்தில் மாதபி புரியின் தலைமையின்கீழ், செபி நியாயமாக விசாரணை நடத்தியிருக்கும் என்று நம்புவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக, சிபிஐ, அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்குமா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

மேலும்