கர்நாடகா | வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட துங்கபத்ரா அணையின் மதகு

By செய்திப்பிரிவு

விஜயநகர்: கர்நாடக மாநிலத்தில் உள்ள துங்கபத்ரா அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றும் மதகு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் அணையில் இருந்து விநாடிக்கு 1 லட்சம் கனஅடி நீர் வெளியேறி வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பி வழிகின்றன. கொப்பல் மாவட்டத்தில் உள்ள துங்கபத்ரா அணை வேகமாக நிரம்பியதையடுத்து, அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படும் போது 19வது மதகு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் துங்கபத்ரா அணையில் இருந்து கிட்டத்தட்ட விநாடிக்கு 1 லட்சம் கனஅடி நீர் வெளியேறி வருகிறது. இதில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மதகில் இருந்து மட்டும் விநாடிக்கு 33 ஆயிரம் கனஅடி நீர் வெளியேறி வருகிறது.

இதனால், கொப்பல், விஜயநகரம், பல்லாரி மற்றும் ராய்ச்சூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் வசிக்கும் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1970ல் கட்டப்பட்ட 105 டிஎம்சி கொள்ளளவு கொண்ட துங்கபத்ரா அணையில் இருந்து குறைந்தபட்சம் 60 முதல் 65 டிஎம்சி தண்ணீரையாவது திறந்துவிட்டால் தான் அணையின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். அதன்பிறகே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மதகை சீர்செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE