தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு இந்திய ராக்கெட்டுகள் குறித்த சிறப்பு வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சந்திரயான் -3 விண்கலம் கடந்தாண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறக்கப்பட்டது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கி பரிசோதித்த முதல் நாடு இந்தியா என்ற பெருமை கிடைத்தது.

இதன் வெற்றியைக் கொண்டாடும் வகையில், இந்தியா இந்தாண்டு முதல் ‘தேசிய விண்வெளி தினத்தை’ கொண்டாட முடிவு செய்துள்ளது. இதை முன்னிட்டு இந்தியாவின் சந்திரயான் திட்ட சாதனைகளை கொண்டாடும் வகையில் முக்கிய நிகழ்ச்சிகள் டெல்லியில் வரும் 22-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு இஸ்ரோவும், ‘இந்திய ராக்கெட்டுகளின் தொகுப்பு’ என்ற பெயரில் சிறப்பு கிராபிக்ஸ் வீடியோவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

இதில் இஸ்ரோ முதன் முதலில் ஏவிய பரிசோதனை ராக்கெட் எஸ்எல்வி-3 முதல், பலவகை செயற்கைக்கோள்களை அனுப்ப பயன்படுத்திய பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள், விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு பயன்படுத்தப்படவுள்ள எச்எல்விஎம்-3 வரை அனைத்துவித ராக்கெட்டுகளும் இடம் பெற்றுள்ளன.

இந்திய ராக்கெட்டுகளின் எடை மனிதர்கள் மற்றும் யானைகளுடன் ஒப்பிடப்பட்டு அனைவருக்கும் புரியும் வகையில் இந்த கிராபிக்ஸ் வீடியோ உள்ளது. இதன் மூலம் விண்வெளி திட்டத்தில் இந்திய ராக்கெட்டுகளின் வளர்ச்சியை அறியலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE