வயநாடு பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு: நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்கள், சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல்

By செய்திப்பிரிவு

வயநாடு: கேரள மாநிலத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதிகளை பிரதமர் மோடி நேற்று ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார்.முகாம்களில் தங்கியுள்ளவர்களையும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார். கேரள அரசுக்கு மத்திய அரசு துணை நிற்கும், நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் உட்பட அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்தார்.

கேரள மாநிலம், வயநாடு பகுதியில் கனமழை காரணமாக கடந்த மாதம் 30-ம் தேதி அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது. வயநாடு மாவட்டத்தின் முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா, மேப்பாடி ஆகிய பகுதிகளில் நிலச்சரிவால் வீடுகள் மண்ணில் புதைந்தன. இதில் இதுவரை 427-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோரை காணவில்லை. மீட்புப் பணிகள் நேற்று 12-வது நாளாக நடைபெற்றன. இதையடுத்து, வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். மேலும், மறுசீரமைப்பு பணிகள், நிவாரண உதவிகளுக்கு ரூ.2,000 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த சூழலில் டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை 11 மணிக்கு கண்ணூர் விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து 11.15 மணிக்கு விமானப்படைக்கு சொந்தமான எம்ஐ-17 ஹெலிகாப்டரில் புறப்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். அப்போது, நிலச்சரிவு தொடங்கிய இடம் (இருவழிஞ்சி புழா ஆறு), ஆற்றின் பாதை, முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி பகுதிகளில் நிலச்சரிவால் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி பார்வையிட்டார். பிரதமர் மோடியுடன் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன், மத்திய சுற்றுலா மற்றும் பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி ஆகியோரும் சென்றனர்.

பின்னர் கல்பெட்டா பகுதியில் உள்ள எஸ்கேஎம்ஜே மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். அங்கிருந்து வாகனம் மூலம் சாலை வழியாக சூரல்மலை பகுதிக்கு சென்றார். அங்கு மீட்பு பணிக்காக ராணுவத்தினர் அவசரமாக அமைத்திருந்த 190 அடி நீள பெய்லி பாலத்தின் வழியாக சென்று நிலச்சரிவின் பாதிப்புகளை பார்வையிட்டார். அங்கு குவிந்திருந்த இடிபாடுகளை பார்த்தார். அங்கு நடைபெற்று வரும் மீட்பு பணிகள், நிவாரணப் பணிகளை பார்வையிட்டார்.

கல்பெட்டாவில் நிலச்சரிவால் நொறுங்கிய ஜிவிஎச்எஸ் அரசு பள்ளியை பார்வையிட்ட பிரதமர், நிலச்சரிவால் எத்தனை குழந்தைகள் பெற்றோரை இழந்தன என்று முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபியைப் பார்த்து வேதனையுடன் கேட்டார்.நிலச்சரிவால் முற்றிலும் உருக்குலைந்து கிடந்த அந்தப் பள்ளியை பார்த்து பிரதமர் மிகவும் வேதனைப்பட்டார். பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். மேலும் அந்த இடத்தில் புதிய பள்ளிகட்டுவது குறித்து பினராயிடம் பிரதமர் மோடி அங்கேயே ஆலோசனை நடத்தினர். ஜிவிஎச்எஸ் பள்ளியில் மொத்தம் 582 மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களில் 27 மாணவர்கள் நிலச்சரிவுக்கு பிறகு காணவில்லை என்ற தகவலை பிரதமர் மோடியிடம் முதல்வர் பினராயி தெரிவித்தார்.

பின்னர் சூரல் மலையில் வாகனத்தில் இருந்து கீழே இறங்கிய பிரதமர் மோடி குப்பை மேடாகக் கிடந்தபகுதிகளில் நடந்து சென்று பாதிப்புகளை பார்வையிட்டார். சுமார் 50 நிமிடங்கள் அந்த பகுதிகளில் பாதிப்புகளை சுற்றிப் பார்த்தார். நிலச்சரிவால் சேதமடைந்த பள்ளிகள், மண்ணில் புதைந்திருந்த வீடுகளை பார்வையிட்டார். முண்டக்கைப் பகுதிக்கு சென்றும் நிலச்சரிவின் பாதிப்புகளை கண்டறிந்தார். பின்னர் அங்கிருந்த மீட்புப் படையினர், மாநில தலைமை செயலர் வி.வேணு, மாவட்ட அதிகாரிகளுடன் நிலவரம் குறித்து கேட்டறிந்தார். அப்போது சூரல்மலை பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடியிடம் கேரள போலீஸ் ஏடிஜிபி (சட்டம் ஒழுங்கு) அஜித் குமார் எடுத்துரைத்தார்.

பின்னர் மதியம் 12.15 மணி அளவில் நிவாரண முகாம்களுக்கு சென்றார். அங்கு தங்கியுள்ள மக்களை சந்தித்து உரையாடினார். நிலச்சரிவில் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களையும் பிரதமர் மோடிசந்தித்து ஆறுதல் கூறினார். ரிப்பான் பகுதியில் உள்ள டாக்டர் மூப்பன் வயநாடு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் அவர் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார்.

மருத்துவமனையில் இருந்த சிறுவர், சிறுமிகள், அவர்களது உறவினர்களிடம் பேசி ஆறுதல் கூறினார். மருத்துவர்கள், செவிலியர்களிடம் சிகிச்சை குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். அப்போது முகாம்கள், மருத்துவமனையில் தங்கியுள்ளவர்கள் சந்தித்த நிலச்சரிவு பயங்கரம் மற்றும் அவர்களுடைய மனநிலை பாதிப்பு குறித்து பிரதமர் மோடியிடம் டாக்டர்கள் எடுத்துரைத்தனர்.

பின்னர் பிற்பகல் 2.30 மணிக்கு மேப்பாடி பகுதிக்கு சென்றார். அங்கு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து உரையாடினார். சுமார் 30 நிமிடங்கள் அந்த பகுதியை சுற்றிப் பார்த்தார். நிலச்சரிவில் உயிர் பிழைத்த சிலரை சந்தித்து அவர்களுடைய குறைகள், தேவைகளை கவனமாக கேட்டறிந்தார். பாதிக்கப்பட்ட மக்களின் தலைகளை வருடியும், தோள்களில் தட்டிக் கொடுத்தும் பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். அப்போது சிலர் தாங்கள் சந்தித்த கொடுமையை கூறி கண்ணீர் விட்டு அழுதனர்.

மோடி தலைமையில் ஆய்வு கூட்டம்: பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி, மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி, மாநில அமைச்சர்கள் ஏ.ராஜன், ஏ.கே.சசீந்திரன், பி.ஏ.முகமது ரியாஸ், மாநில ஏடிஜிபி அஜித் குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் வயநாடு பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள புனரமைப்பு பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைப்பு மற்றும் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக பிரதமர் மோடி உறுதி அளித்தார். மாநில அரசு கோரும் உதவிகளை மத்திய அரசு நிச்சயம் செய்து கொடுக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.

மாலை 5 மணிக்கு தனது பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி மீண்டும் கண்ணூர் விமானநிலையம் வந்து அங்கிருந்து டெல்லி சென்றார்.

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த ராகுல்: வயநாட்டில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி ஆய்வு செய்ததற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி தனது சமூக வலைதள பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

வயநாட்டில் ஆய்வு செய்ய வந்தது நல்ல முடிவு. கடுமையான பாதிப்பை நேரில் ஆய்வு செய்ய வயநாடு வந்ததற்கு நன்றி மோடிஜி. வயநாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பிரதமர் மோடி பார்த்தால், அதன் வீரியம் புரியும். அதன்பிறகு வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அவர் அறிவிப்பார் என்று நம்புகிறேன். இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்