“என் இதயம் கனத்துவிட்டது... கேரளா தனித்து விடப்படவில்லை!” - வயநாட்டில் பிரதமர் மோடி விவரிப்பு

By செய்திப்பிரிவு

வயநாடு: “கேரளா தனித்து விடப்படவில்லை. வயநாடு நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்” வயநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று (சனிக்கிழமை) நேரில் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதனையடுத்து, பிரதமர் மோடி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கான், முதல்வர் பினராயி விஜயன், கேரளாவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரண உதவிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டபோதும், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தபோதும் என் இதயம் கனத்துவிட்டது. மறுவாழ்வுப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டிய தருணம் இது. கேரளா தனித்து விடப்படவில்லை. ஒட்டுமொத்த தேசமும் கேரள மக்களோடு இருக்கிறது. சாத்தியமான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன்; நீங்கள் தனித்து விடப்படவில்லை. மத்திய அரசும் கேரள அரசும் இணைந்து வயநாட்டை மீட்டுருவாக்கும் பணிகளை மேற்கொள்ளும். மறுவாழ்வுப் பணிகளுக்கு நிதி ஒருபோதும் தடையாக இருக்காது. மாநில அரசு முன்வைக்கும் அனைத்து கோரிக்கைகளையும் மத்திய அரசு நிறைவேற்றும்" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

முன்னதாக, கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், பாதிக்கப்பட்ட மக்களையும் பார்ப்பதற்காக விமானம் மூலம் இன்று காலை கேரளாவின் கண்ணூர் விமான நிலையம் வந்த பிரதமர் மோடி, பின்னர் அங்கிருந்து இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் மூலம் காலை 11.15 மணியளவில் வயநாடு புறப்பட்டார்.

வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மாலா, முண்டக்கை, புஞ்சிரிமட்டம் ஆகிய கிராமங்களில் அவர் வான்வழி ஆய்வு மேற்கொண்டார். நிலச்சரிவை அடுத்து கல், மண் ஆகியவற்றோடு பெருக்கெடுத்து ஓடிய இருவழிஞ்சி ஆற்றையும் பிரதமர் மோடி பார்வையிட்டார். அப்போது, ஒவ்வொரு பகுதியிலும் ஏற்பட்ட பாதிப்பின் தன்மை குறித்து பிரதமர் மோடிக்கு விளக்கப்பட்டது. மேலும், பாதிப்புகள் குறித்த புகைப்படங்களையும் டேப் மூலம் பிரதமர் மோடி பார்த்தார்.

இதனையடுத்து, தரை மார்க்கமாகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். வாகனத்தை விட்டு பல பகுதிகளுக்கும் நடந்து சென்ற பிரதமர் மோடி, அங்கு நிலச்சரிவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நெருக்கமாக ஆய்வு செய்தார். அப்போது, அங்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பிரதமருக்கு அதிகாரிகள் விளக்கினர்.

இந்த ஆய்வை அடுத்து, நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டள்ள முகாம்களுக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களில் சிலர் தங்கள் குறைகளை கண்கலங்கியவாறு கூறியதைக் கேட்ட பிரதமர், அவர்களின் தோல்களில் தட்டிக் கொடுத்து ஆறுதல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பிரதமர் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். பிரதமருடன் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன், மத்திய சுற்றுலா மற்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி ஆகியோர் உடன் சென்றனர்.

பேரிடர் பாதித்த பகுதியில் மறுவாழ்வு மற்றும் நிவாரணப் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள மத்திய அரசிடம் கேரள அரசு ரூ.2,000 கோடி நிதியுதவி கோரி இருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

மேலும்