வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்

By செய்திப்பிரிவு

வயநாடு: கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று (சனிக்கிழமை) நேரில் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், பாதிக்கப்பட்ட மக்களையும் பார்ப்பதற்காக விமானம் மூலம் இன்று காலை கேரளாவின் கண்ணூர் விமான நிலையம் வந்த பிரதமர் மோடி, பின்னர் அங்கிருந்து இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் மூலம் காலை 11.15 மணியளவில் வயநாடு புறப்பட்டார்.

வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மாலா, முண்டக்கை, புஞ்சிரிமட்டம் ஆகிய கிராமங்களில் அவர் வான்வழி ஆய்வு மேற்கொண்டார். நிலச்சரிவை அடுத்து கல், மண் ஆகியவற்றோடு பெருக்கெடுத்து ஓடிய இருவழிஞ்சி ஆற்றையும் பிரதமர் மோடி பார்வையிட்டார். அப்போது, ஒவ்வொரு பகுதியிலும் ஏற்பட்ட பாதிப்பின் தன்மை குறித்து பிரதமர் மோடிக்கு விளக்கப்பட்டது. மேலும், பாதிப்புகள் குறித்த புகைப்படங்களையும் டேப் மூலம் பிரதமர் மோடி பார்த்தார்.

இதனையடுத்து, தரை மார்க்கமாகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். வாகனத்தை விட்டு பல பகுதிகளுக்கும் நடந்து சென்ற பிரதமர் மோடி, அங்கு நிலச்சரிவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நெருக்கமாக ஆய்வு செய்தார். அப்போது, அங்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பிரதமருக்கு அதிகாரிகள் விளக்கினர். பிரதமருடன் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன், மத்திய சுற்றுலா மற்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி ஆகியோர் உடன் சென்றனர்.

இந்த ஆய்வை அடுத்து, நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டள்ள முகாம்களுக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களில் சிலர் தங்கள் குறைகளை கண்கலங்கியவாறு கூறியதைக் கேட்ட பிரதமர் அவர்களின் தோல்களில் தட்டிக்கொடுத்து ஆறுதல் தெரிவித்தார்.

இதனை அடுத்து பிரதமர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மத்திய அரசின் கூடுதல் உதவிகள் குறித்த அறிவிப்பை அவர் வெளியிட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. பிரதமரின் வருகையை ஒட்டி வயநாடு மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நக்ஸலைட்டுகளின் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் பாதுகாப்பு பணியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பேரிடர் பாதித்த பகுதியில் மறுவாழ்வு மற்றும் நிவாரணப் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள மத்திய அரசிடம் கேரள அரசு ரூ.2,000 கோடி நிதியுதவி கோரி இருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE