குழந்தை திருமணத்தை தடுக்க நடவடிக்கை: மாணவிகள் உயர்கல்வி பெற அசாமில் ரூ.2,500 நிதியுதவி

By செய்திப்பிரிவு

குவஹாதி: அசாமில் குழந்தை திருமணத்தைதடுக்கவும் உயர்கல்வியை ஊக்குவிக்கவும் மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தைத் தொடங்கிவைத்து முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறியதாவது:

அசாம் அரசின், ‘நிஜுத் மொய்னா’ திட்டத்தின்கீழ் மாணவிகளுக்கு கல்வியாண்டின் 10 மாதங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும். பள்ளியில் 11, 12-ம்வகுப்புகளில் பயிலும் மாணவிகளுக்குக் கல்வியாண்டின் 10 மாதங்களில் மாதந்தோறும் தலா ரூ.1,000 வழங்கப்படும். இளநிலை பட்டப்படிப்பு மேற்கொள்ளும் மாணவிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,250-ம், முதுநிலை பட்டம் பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.2,500-ம் ஒவ்வொரு கல்வியாண்டின் 10 மாதங்களில் வழங்கப்படும்.

முதலாண்டில் நிபந்தனை யின்றி வழங்கப்படும் இந்த உதவித்தொகை, மாணவியரின் வருகைப்பதிவு மற்றும் ஒழுக்க நெறி பதிவேட்டின் அடிப்படையில் அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்.

படிப்பின்போது திருமணம் முடித்த மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது. இதுதவிர சட்டமன்ற உறுப்பினர்கள், எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களின் மகள்களுக்கு இது பொருந்தாது. 12-ம் வகுப்புபொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்ணோடு தேர்ச்சி பெற்று அரசின் ஸ்கூட்டர் பரிசு வென்றமாணவிகளுக்கும் இது பொருந்தாது. இவ்வாறு ஹிமந்த பிஸ்வா சர்மா கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE