வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 1,500 பேர் தடுத்து நிறுத்தம்

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 1,500 பேர் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து பல்வேறு மாணவர்கள் சங்கங்கள் கடந்த ஜூன், ஜூலையில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதில் இதுவரை 560 பேர் உயிரிழந்துள்ளனர். பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.

இந்த சூழலில் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் காவல் துறையினர் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. சிறுபான்மையினரான இந்துக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது.

கலவரத்தால் பாதிக்கப்பட்ட வங்கதேச மக்கள் இந்தியாவுக்குள் நுழைய தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேற்குவங்கத்தின் ஜல்பைகுரி பகுதி எல்லை வழியாக நேற்று முன்தினம் 500-க்கும் மேற்பட்ட வங்கதேச மக்கள் இந்தியாவுக்குள் நுழைய முயன்றனர். அவர்களை எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பினர்.

இதேபோல பிஹாரின் கிஷான்கஞ்ச் பகுதியில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட வங்கதேச மக்கள் இந்திய எல்லையில் நுழைய முயன்றனர். அவர்களை எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களும் போலீஸாரும் இணைந்து தடுத்து நிறுத்தினர்.

இந்தியாவின் மேற்குவங்கம், அசாம், மேகாலயா, மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்கள் வங்கதேசத்துடன் எல்லையை பகிர்ந்துள்ளன. இந்த மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. பிஹார் மாநிலம் நேரடியாக வங்கதேசத்துடன் எல்லையை பகிரவில்லை. ஆனால் வங்கதேச மக்கள், நேபாளம் வழியாக பிஹாருக்குள் நுழைய முயற்சி செய்கின்றனர் என்று மாநில போலீஸார் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE