சபாநாயகர் அதிகாரம்: மக்களவையில் அகிலேஷுக்கு எதிராக கொதித்தெழுந்த அமித் ஷா

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தொடர்பான விவாதத்தின்போது சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரும் காட்டமாக பேசிக்கொண்டது கவனம் ஈர்த்தது.

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவுக்கு பாஜக கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவுசெய்தன. மசோதா தொடர்பான விவாதத்தில் பங்கேற்று பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “மற்ற மத அமைப்புகளில் மாற்று மதங்களை சார்ந்தவர்கள் உறுப்பினராக இல்லை. அப்படியிருக்கும்போது வக்ஃப் அமைப்புகளில் முஸ்லிம் அல்லாதவர்களைச் சேர்ப்பது ஏன்? அதனால் என்ன பயன்?. மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு பாஜக தங்களது ஆதரவாளர்களை திருப்திப்படுத்த வக்ஃப் மசோதாவை கொண்டு வந்துள்ளது" என்றார்.

முன்னதாக, அகிலேஷ் யாதவ் பேசத் தொடங்கும்போது சபாநாயகர் உரிமை தொடர்பாக பேசினார். அதில், "உங்கள் உரிமைகளும், எங்கள் உரிமைகளும் குறைக்கப்படுகின்றன. நீங்கள் ஜனநாயகத்தின் நீதிபதி என நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன். ஆனால், உங்களின் சில உரிமைகள் பறிக்கப்படுவதாகவும், உங்களுக்காக நாங்கள் போராட வேண்டும் என கேள்விப்பட்டேன்" என்று அகிலேஷ் பேசினார்.

அப்போது, அவரின் பேச்சை இடைமறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "அகிலேஷின் இந்த பேச்சு சபாநாயகரை அவமதிக்கும் செயல். மக்களவையின் தலைவரான சபாநாயகரின் உரிமை என்பது எதிர்க்கட்சிகளுக்கு சொந்தமானது அல்ல. முழு அவைக்கும் சொந்தமானது. இனிமேல் இதுபோல் பேசாதீர்கள். நீங்கள் சபாநாயகரின் உரிமைகளைப் பாதுகாப்பவர் அல்ல" என்று காட்டமாக பேசினார்.

இதன்பின் அகிலேஷ் யாதவிடம் பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, "நீங்களோ அல்லது அவையின் மற்ற உறுப்பினர்களோ சபாநாயகர் குறித்து கருத்து தெரிவிக்கக் கூடாது. சபாநாயகர் பதவி குறித்து தனிப்பட்ட கருத்துகள் எதுவும் சொல்லக் கூடாது. இதுவே எனது எதிர்பார்ப்பு" என்று தெரிவித்தார். அகிலேஷ் யாதவ் மற்றும் அமித் ஷா இடையேயான விவாதத்தால் அவையில் ஒரு நிமிடம் அமைதி நிலவியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE