ஜம்மு காஷ்மீரில் பேரவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்கிறது தேர்தல் ஆணையக் குழு

By செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்ய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையக் குழுவினர் வியாழக்கிழமை ஸ்ரீநகர் சென்றடைந்தனர். ஆய்வுக் குழுவில் தலைமைத் தேர்தல் ஆணையர் தவிர, தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார் மற்றும் சுக்பிர் சிங் சந்து ஆகியோர் இருந்தனர்.

இந்த ஆய்வு பயணத்தின்போது தேர்தல் ஆணையக் குழு, யூனியன் பிரதேசத்தில் உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரைச் சந்தித்து கூட்டங்கள் நடத்துவர். முன்னதாக, ஹரியாணா, மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கான சட்டபேரவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் ஜூலை 21-ம் தேதி தொடங்கியது.

இந்த மாநிலங்களில் உள்ள அரசுகளின் பதவிக்காலம் முறையே, 2024 நவம்பர் 3 மற்றும் 26, 2025 ஜனவரி 5-ல் முடிவடைகிறது. அந்த மாநில அரசுகளின் பதவிக் காலம் முடிவடைவதற்குள் அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் முன்பு வெளியிட்டிருந்த அறிகையில் தெரிவித்திருந்தது.

இதனிடையே, நடந்து முடிந்து மக்களைத் தேர்தலில் ஜம்மு காஷ்மீர் மக்கள் பெருவாரியாக வாக்களித்ததைத் தொடர்ந்து அங்கு வாக்காளர் பட்டியலைப் புதுப்பிக்கும்படி, தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. இதுகுறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர் சந்திப்பபு ஒன்றில் கூறுகையில், "மக்களவைத் தேர்தலில் ஜம்மு காஷ்மீர் மக்கள் பெருவாரியாக பங்கெடுத்தது, பெரும் நம்பிக்கை மற்றும் உத்வேகம் அளிப்பதாகவும் இருக்கிறது. மேலும், ஜனநாயகத்தில் பங்கேற்க மக்கள் எவ்வளவு துடிப்பாக உள்ளனர் என்று காட்டுவதாக உள்ளது.

மக்கள் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி, அவர்களின் எதிர்காலத்தையும், ஆட்சியையும் தீர்மானிக்க வேண்டும். அதனை நிறைவேற்றுவதற்கு தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது. ஜம்மு காஷ்மீரில் தேர்தலுக்கான பணிகள் விரைவில் தொடங்கும்" எனத் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, ஜம்மு காஷ்மீர் பாஜகவின் தலைமை செய்தித் தொடர்பாளர் சுனில் சேதி கூறுகையில், "சட்டப் பேரவைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். தேர்தலைச் சந்திக்க பாஜக தயாராக உள்ளது. எத்தனை கட்டங்களாக தேர்தல் நடத்துவது மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சில சந்தேகங்கள் எங்களுக்கு உள்ளன" என்று தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் ரஃபிக் வானி கூறுகையில், "தேர்தலைச் சந்திக்க பாஜக முழு அளவில் தயாராக உள்ளது. மக்களவைத் தேர்தலைப் போல, சட்டப்பேரவைத் தேர்தலிலும் மக்கள் அதிக அளவில் பங்கேற்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE