மாம்பழ சண்டையின்போது ஒருவர் அடித்து கொலை: 3 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை 7 ஆண்டுகளாக குறைப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த 1984-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி மாம்பழம் தொடர்பாக சிறுவர்களுக்கிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் சிறுவர்களின் பெற்றோர் ஈடுபட்ட தால் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது கம்பால் தாக்கியதில் ஒரு சிறுவனின் தந்தை விஸ்வநாத் சிங் உயிரிழந்தார்.

இது தொடர்பாக கோண்டா மாவட்டத்தில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் 3 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி 1986-ம்ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்து கடந்த2022-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நீதிபதிகள் சுதான்ஷு துலியா மற்றும் ஆசானுதீன் அமானுல்லா அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

இந்த வழக்கின் சூழ்நிலை மற்றும் உண்மைத்தன்மை, உயிரிழந்தவருக்கு ஏற்பட்ட காயத்தின் தன்மை, தாக்குதலுக்கு பயன்படுத்திய ஆயுதம் (கம்பு) ஆகியவற்றை பரிசீலித்தோம். இதன் அடிப்படையில், இது திட்டமிட்ட கொலை இல்லை என்றும் மரணம் விளைவிக்கக் கூடிய குற்றம் என்றும் மனுதாரர் முன்வைத்த வாதத்தை ஏற்கிறோம்.

எனவே, குற்றவாளிகளுக்கு இந்திய தண்டனை சட்டத்தின் 302-வது (கொலை) பிரிவின் வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை, 7 ஆண்டு கடுங்காவல் சிறைதண்டனையாக குறைக்கப்படுகிறது. மேலும் குற்றவாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. 8 வாரத்தில் இதை செலுத்த வேண்டும். இந்ததொகையை பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணமாக வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE