ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவ மத்திய அரசின் நடவடிக்கை என்ன? - மக்களவையில் கதிர் ஆனந்த் கேள்வி

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவிட மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து திமுக எம்பியான டி.எல்.கதிர் ஆனந்த் மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார்.

இது குறித்து இன்று மக்களவையில் வேலூர் தொகுதி எம்பியான கதிர் ஆனந்தின் கேள்விக்கு சிறுபான்மைத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எழுத்து பூர்வமாக அளித்த பதில் பின்வருமாறு: “ஹஜ் தொடர்பான செயல்முறைகளின் டிஜிட்டல் மயமாக்கல் அதிகரித்து வருகிறது. இதனால், வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ளவர்கள் உட்பட இந்தியா முழுவதும் உள்ள ஹஜ் யாத்ரீகர்களுக்கு ஏராளமான சேவைகள் டிஜிட்டல் முறையில் ஆன்லைனில் வழங்கப்படுகின்றன.

ஹஜ் விண்ணப்பங்களை ஆன்லைனில் தாக்கல் செய்யும் முறை அமலாகி உள்ளது. ஹஜ் கமிட்டி ஆஃப் இந்தியா இணையதளம் மூலம் நிகழ்நேர தகவல்களைப் பரப்பி வருகிறோம். சிறந்த மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக யாத்ரீகர்களின் மருத்துவப் பதிவுகளை ஆன்லைனில் புதுப்பிக்கப்படுகின்றன. ஹஜ் சுவிதா செயலி குறை தீர்க்கும் ஒரு வசதியான ஊடகமாக செயல்படுகிறது.

மேலும் இதில், யாத்ரீகர்களுக்கானப் பயிற்சி, தங்குமிடம் தொடர்பான விவரங்கள், விமானம், சாமான்கள் ஆகியவை அடங்கும். செயல்முறைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான இந்திய ஒன்றிய அரசின் முன்முயற்சிகள் ஹஜ் யாத்ரீகர்களுக்கு எளிமையான வசதிகளாக அமைந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும், அனைத்து ஹஜ் யாத்ரீகர்களுக்கும் பயிற்சி அளிக்க இந்திய ஹஜ் கமிட்டியால் மாவட்ட அளவிலான பயிற்சி முகாம்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. ஹஜ் 2024-க்காக, வேலூரில் 248 ஹஜ் யாத்ரீகர்களுக்கு ஏப்ரல் 23-ல் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

பிரத்யேக ஹெல்ப்லைன் போன்ற கூடுதல் வசதி சேவைகளும் இந்திய ஹஜ் கமிட்டியால் செயல்படுத்தப்படுகின்றன, இது வேலூர் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து வரும் ஹஜ் யாத்ரீகர்கள் உட்பட அனைத்து இந்திய ஹஜ் யாத்ரீகர்களுக்கும் அணுகக்கூடிய வகையில் உள்ளது. வெளிநாட்டில் உள்ள இந்தியர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் மிக உயர்ந்த முன்னுரிமையாகும். வெளிநாடுகளில் உள்ள நமது பிரஜைகளின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வலுவான நிறுவன கட்டமைப்பை உருவாக்குவதற்கு மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களில், இந்தியர்கள் எழுப்பும் எந்தவொரு பிரச்சினைக்கும் முன்னுரிமை அடிப்படையில் பதிலளிக்கப்படுகிறது. அழைப்புகள், மின்னஞ்சல்கள், சமூக ஊடகங்கள், 24x7 ஹெல்ப்லைன்கள், எம்ஏடிஏடி இணையங்கள் போன்ற பல்வேறு சேனல்கள் மூலம் குறைகள் பதிலளிக்கப்படுகின்றன.

வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களிடமிருந்து பெறப்படும் எந்தவொரு புகார்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொண்டு சேர்க்கப்படுகிறது. ஏதேனும் அசம்பாவித சம்பவம் நடந்தால், அந்த சம்பவம் முறையாக விசாரிக்கப்பட்டு, உரிய முறையில் தீர்வு காணப்படுவதை உறுதிசெய்ப்படுகிறது. இதற்காக, அந்நாட்டின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உடனடியாக எடுத்துச் செல்லப்படுகிறது.மேலும், அவசர கால அல்லது நெருக்கடியான சூழ்நிலைகளின் போது, ​​வெளிநாடுகளில் உள்ள தூதரகம் மூலம் இந்தியப் பிரஜைகளுக்கு உதவி கிடைக்கிறது. இதில், தங்குமிடம், மருந்து மற்றும் இந்தியாவிற்கு திரும்பிச் செல்ல வழி போன்றவையும் அடங்கும்.

ஹஜ் யாத்ரீகர்களுக்கு வசதியாக, இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் ஒரு சுற்றறிக்கையை வெளியிடுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து பாஸ்போர்ட் வழங்கும் அதிகாரிகளும், இதர அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். வருங்கால ஹஜ் யாத்ரீகர்களிடமிருந்து பெறப்பட்ட பாஸ்போர்ட் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. வருங்கால ஹஜ் விண்ணப்பதாரர்களுக்கு பல்வேறு வழிகளில் தேவையான உதவிகளை வழங்குவது இதில் அடங்கும். ஹஜ் விண்ணப்பதாரர்களுக்கான சந்திப்பு இடங்கள் முன்பதிவு செய்யப்படுகிறது. குடிமக்களிடமிருந்து உடனடி முறையில் பெறப்பட்ட கோரிக்கைகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE