வினேஷ் போகத் தகுதி நீக்கம்: கடும் எதிர்ப்பை பதிவு செய்ததாக மக்களவையில் அமைச்சர் விளக்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பாரிஸ் ஒலிம்பிக் மகளிருக்கான 50 கிலோ எடைப் பிரிவு மல்யுத்த போட்டியில் இருந்து கடைசி நேரத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கமானது ஐக்கிய மல்யுத்த கூட்டமைப்பிடம் (UWW) கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளதாக, மக்களவையில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

வினேஷ் போகத் தகுதி நீக்கத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டுப் பிரபலங்கள், ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் ஆறுதல் தெரிவித்து வரும் நிலையில், வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து விளையாட்டு அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று மக்களவையில் விளக்கினார்.

அப்போது அவர், “நிர்ணயிக்கப்பட்ட எடையைவிட 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் தகுதி நீக்கம் தொடர்பாக ஐக்கிய மல்யுத்த கூட்டமைப்பிடம் இந்திய மல்யுத்த சங்கம் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. பிரதமர் மோடி இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவரிடம் பேசியுள்ளார். உரிய நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியுள்ளார்.

ஒலிம்பிக் மல்யுத்த போட்டிக்கான ஆயத்த பயிற்சியாக இருக்கட்டும், முன்னேற்பாடுகளாக இருக்கட்டும், அனைத்திலும் இந்திய அரசு முழு ஆதரவு கொடுத்தது. அவருக்காக தனிப்பட்ட அலுவலர் கூட பணியமர்த்தப்பட்டார். வினேஷுக்கு தேவையான அனைத்து நிதியுதவிகளையும் செய்துள்ளோம்” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, ஒலிம்பிக் மல்யுத்தத்தில் நேற்று (செவ்வாய்கிழமை) நடைபெற்ற பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவின் அரையிறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுவை அபாரமாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் வினேஷ் போகத். இதன் மூலம், வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்ததுடன், ஒலிம்பில் மல்யுத்த மகளிர் பிரிவின் இறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார். ஆனால், இந்திய நேரப்படி இன்று காலை 9 மணியளவில் நடந்த உடல் எடை தகுதி பரிசோதனையில் நிர்ணயிக்கப்பட்ட 50 கிலோவை தாண்டி 100 கிராம் எடையளவு கூட இருந்ததால் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதன்மூலம் அவரது பதக்கக் கனவு முற்றிலும் தகர்ந்தது. | முழு விவரம் > வினேஷ் போகத் தகுதி நீக்கம்: பாரிஸ் ஒலிம்பிக்கில் தகர்ந்தது பதக்கக் கனவு

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE