வினேஷ் போகத் தகுதி நீக்கம்: குடியரசுத் தலைவர், அமித் ஷா, ராகுல் காந்தி ஆறுதல்

By செய்திப்பிரிவு

புது டெல்லி: பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியிலிருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “பாரிஸ் ஒலிம்பிக்கில் வினேஷ் போகத்தின் அசாதாரண சாதனைகள் ஒவ்வொரு இந்தியரையும் சிலிர்க்க வைத்ததுடன், நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது. தகுதி நீக்கம் குறித்த ஏமாற்றம் இருந்தாலும், அவர் 1.4 பில்லியன் மக்களின் இதயங்களில் சாம்பியனாக நிலைத்திருப்பார். வினேஷ் இந்தியப் பெண்களின் விடாமுயற்சியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், அவரது மன உறுதியும், விடாமுயற்சியும் இந்தியாவின் வருங்கால உலக சாம்பியன்களை ஊக்குவிக்கிறது. எதிர்காலத்தில் அவருக்கு பல விருதுகள் கிடைக்க வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

அமித்ஷா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஒலிம்பிக்கில் வினேஷ் போகத்துக்கு ஏற்பட்ட பின்னடைவு மில்லியன் கணக்கான இந்தியர்களின் நம்பிக்கையை தகர்த்துள்ளது.உலக சாம்பியனை வீழ்த்திய பெருமையுடன் அவர் பிரகாசித்துக் கொண்டிருக்கிறார். விளையாட்டுத் துறையில் முன்மாதிரியாக திகழும் அவரது பயணத்தில் இது ஒரு விதிவிலக்கு மட்டுமே. அவர் இதிலிருந்து மீண்டெழுந்து வெற்றியாளராக திகழ்வார் என்பதை உறுதியாக நம்புகிறேன். எங்களின் வாழ்த்தும், ஆதரவும் எப்போதும் அவருக்கு உண்டு” என தெரிவித்துள்ளார்.

ராகுல்காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உலக சாம்பியன் வீராங்கனையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியாவின் பெருமைக்குரிய வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது துரதிஷ்டவசமானது. இந்த முடிவை எதிர்த்து களமாடி இந்திய ஒலிம்பிக் சங்கம் நாட்டின் மகளுக்கு நீதி வழங்கும் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. வினேஷ் விட்டுக்கொடுப்பவர் அல்ல. அவர் மீண்டும் வலுவாக களத்துக்கு வருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. நீங்கள் நாட்டுக்கு பெருமை சேர்த்திருக்கிறீர்கள் வினேஷ். இந்தியா உங்களுடன் துணை நிற்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.

ஒலிம்பிக் பெண்கள் மல்யுத்த போட்டி 50 கிலோ பிரிவில் நிர்ணயித்த அளவை விட 100 கிராம் எடை கூடியதன் காரணத்தால் இறுதிப் போட்டியில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகுதி நீக்கத்தை எதிர்த்து இந்திய ஒலிம்பிக் சங்கம் மேல் முறையீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீர்ச்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வினேஷ் போகத்துக்கு ஆதரவாக தலைவர்கள் குரல் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE