“அரசையும், அரசியலையும் பாஜக வேறுபடுத்தி பார்க்க வேண்டும்” - எம்.பி. நவாஸ்கனி வலியுறுத்தல் 

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: இந்திய அரசையும், அரசியலையும் பாரதிய ஜனதா கட்சி வேறுபடுத்தி பார்க்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) கட்சி எம்.பி. கே.நவாஸ்கனி வலியுறுத்தி உள்ளார். ராமநாதபுரம் எம்.பி.யான அவர் மக்களவையில் நிதியமைச்சகத்தின் மானியம் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய போது இதனைத் தெரிவித்தார்.

நாடாளுமன்ற மக்களவையில், ராமநாதபுரம் எம்.பி.யும், ஐயூஎம்எல் கட்சியின் மாநில துணைத் தலைவருமான கே.நவாஸ்கனி பேசியதாவது: பாஜக அரசு நிதி ஒதுக்குவதில் நீதியற்று நிற்கிறது. கடந்த பத்தாண்டு காலம் பாரபட்சமான ஒரு அரசையே பாஜகவால் தர முடிந்தது. அதேநிலைதான் தற்போதும் தொடர்கிறது. அனைவருக்குமான அரசாக ஒருபோதும் பாஜக அரசு இருந்தது இல்லை. அரசையும் அரசியலையும் பாஜக அரசு வேறுபடுத்தி பார்க்க வேண்டும். தன்னுடைய அரசியலுக்காக இந்திய அரசை பாஜக அரசு பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

சிறப்பு திட்டங்கள் இல்லை: நிதியமைச்சர் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் நாட்டின் சுற்றுலா தலங்களை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில், பீகார் மாநிலத்தில் உள்ள புனித தலங்கள் உள்ளிட்டவைகளை மேம்படுத்துவதற்கு சிறப்பு நிதியை ஒதுக்கிவிட்டு சுற்றுலா மேம்பாடு என்கிறீர்கள். பீகாரின் புனிதத் தலங்கள் தெரியும் உங்களது கண்களுக்கு ராமேசுவரம் தெரியவில்லையா?

தொடர்ந்து அங்கு வந்து செல்லும் நம்முடைய பிரதமர் மற்றும் பாஜக அமைச்சர்களின் கண்களுக்கு அந்த பகுதியின் முன்னேற்றம் தெரியவில்லையா? பின்தங்கிய மாவட்டங்களை முன்னேற்றுவதற்கு எந்த வித சிறப்பு நிதியும் ஒதுக்கப்படுவதில்லை, எந்தவித சிறப்பு திட்டங்களும் கொண்டு வரப்படுவதில்லை.

என்னுடைய நாடாளுமன்ற தொகுதியான ராமநாதபுரம் பின்தங்கிய மாவட்டங்களின் பட்டியலில் வருகிறது. விருதுநகரும் பின்தங்கிய மாவட்டமாகவே உள்ளது. இந்த மாவட்டங்களுக்கு எந்த சிறப்பு திட்டமும் மத்திய அரசால் ஒதுக்கப்படவில்லை.

நிதி பகிர்வில் பாரபட்சம்: மத்திய அரசுக்கு அதிக வரி வருவாயை ஈட்டித்தரும் மாநிலமாக தமிழகம் உள்ளது. ஆனால் மத்திய அரசுக்கு தமிழகம் செலுத்தும் ஒவ்வொரு ரூபாயிலும் 29 காசுகள் மட்டுமே திரும்ப வழங்கப்படுகிறது. அதுவே, உத்தரப் பிரதேசம் செலுத்தும் 1 ரூபாய்க்கு ரூ.2.73, பிஹாருக்கு ரூ.7.06 நிதிப் பகிர்வாக வழங்கப்படுகிறது. பாரபட்சமான நிதி பகிர்வு இது.

பட்ஜெட்டில் பங்குகள் தொடர்பான மூலதன ஆதாய வரி உயர்த்தப்பட்டுள்ளது. நிதி மற்றும் நிதிசாரா சொத்துகளின் விற்பனை மூலம் பெறப்படும் லாபத்துக்கு விதிக்கப்படும் வரி மூலதன ஆதாய வரியாகும். 2024-25 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில், பங்குகள் தொடர்பான குறுகிய கால மூலதன ஆதாய வரி 15 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாகவும், நீண்டகால மூலதன ஆதாய வரி 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இது நடுத்தர மக்களை மிகவும் பாதிக்கக்கூடியது.

எனவே, இந்த அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். அதேபோல், சொத்துகள் தொடர்பான நீண்ட கால மூலதன ஆதாய (எல்டிசிஜி) வரி 20 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், 2001-02 ஆம் நிதியாண்டுக்குப் பிறகு வாங்கிய மனைகள், வீடுகள், கடன் பத்திரங்கள் உள்ளிட்டவைகளுக்கான இண்டக்சேஷன் முறை நீக்கப்பட்டுள்ளது.

இண்டக்சேஷன் குறியீட்டு முறை என்பது பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய ஒரு சொத்தை தற்போது விற்க நேரிடும்போது, பணவீக்கத்தின் விளைவை பிரதிபலிக்கும் வகையில் முதலீட்டின் கொள்முதல் விலையை சரி செய்வதற்கான நடைமுறையாகும்.

இந்த குறியீட்டு முறை நடுத்தர மக்களுக்கு பெரிதும் பயனளிப்பதாக உள்ளது. தற்போது, இந்த முறை பட்ஜெட்டில் நீக்கப்பட்டுள்ளது. இதனால், 2001-02 நிதியாண்டுக்குப் பின்னர் சொத்துகளை வாங்கியவர்கள் மிகவும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. கூடுதலாக பல லட்சம் ரூபாயை அவர்கள் அரசுக்கு வரியாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஒருவர் 2009 ஜனவரியில் ரூ.50 லட்சத்துக்கு குடியிருப்பு ஒன்றை வாங்குகிறார். இதை 15 ஆண்டுகளுக்குப் பிறகு 2024 ஜூலை 26-ல் ரூ.1.5 கோடிக்கு (3 மடங்கு அதிகமாக) அந்த குடியிருப்பை விற்பனை செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். பழைய குறியீட்டு முறையின்படி 15 ஆண்டுகளுக்கு முன்பு அவர் செலுத்திய ரூ.50 லட்சம் இன்றைக்கு பணவீக்கத்தின் அடிப்படையில் ரூ.1.32 கோடியாக கருதப்படுகிறது.

விற்பனை விலையான ரூ.1.5 கோடியிலிருந்து இதனை கழிக்கும்பட்சத்தில் நிகர லாபம் அல்லது மூலதன ஆதாயம் என்பது ரூ.17.5 லட்சமாக மட்டுமே கணக்கிடப்படும். இதற்கு 20 சதவீத வரி விதிக்கப்படும்பட்சத்தில் ரூ.3.5 லட்சம் மட்டுமே மூலதன ஆதாய வரியாக அரசுக்கு அவர் செலுத்த வேண்டியிருக்கும்.

அவருக்கு ரூ.14 லட்சம் லாபம் கிடைக்கும். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட குறியீடு இல்லாத புதிய முறையின்படி இந்த விற்பனையை கணக்கீடு செய்யும்பட்சத்தில் அவருக்குக் கிடைத்த மூலதன ஆதாயம் ரூ.1 கோடியாக கணக்கிடப்படும்.

இதற்கு 12.5 சதவீத வரி விதிக்கப்படும்பட்சத்தில் ரூ. 12.5 லட்சத்தை மூலதன ஆதாய வரியாக அரசுக்கு செலுத்த வேண்டியிருக்கும். அதாவது பழைய முறையை விட புதிய முறையில் மூலதன ஆதாய வரியானது ரூ.9 லட்சம் அதிகமாக இருக்கும்.

ஒரு சொத்தை வாங்கி 15 ஆண்டுகள் வைத்திருத்து விற்பனை செய்தற்கு ரூ.5 லட்சம் மட்டுமே லாபமாக கிடைக்கும். அதேசமயம், பழைய முறையில் கிடைத்த லாபம் ரூ.14 லட்சமாக இருந்திருக்கும். ஆக, குறியீடு இல்லாத புதிய கணக்கீடு முறையில் சொத்து விற்பனையாளருக்கு ரூ.9 லட்சம் அளவுக்கு இழப்பு ஏற்படுகிறது.

தொடர்ந்து தாக்கப்படும் தமிழக மீனவர்கள்: இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து எங்கள் (தமிழக) மீனவர்கள் வேட்டையாடப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இதற்கு நிரந்தர தீர்வு காணப்படாமல், தொடர்ந்து எங்கள் மீனவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் சிறைபிடிக்கப்படுவதும், உயிர் பறிபோவதுமாக மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இருநாட்டு மீனவர்களுக்கிடையே உடனடியாக பேச்சு வார்த்தையை துவங்க வேண்டும். இதுவரை இல்லாத அளவிற்கு நாட்டு படகுகளையும் இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளது .

கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு இதுவரை ஒரு ரூபாய் கூட நிதியுதவி அளிக்கவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மத்திய அரசு தரப்பில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

சிறுபான்மையினரை வஞ்சிக்கும் அரசு: சிறுபான்மையினருக்கு எதிராக சட்டங்களை தொடர்ந்து இயற்றக்கூடிய அரசாக இந்த அரசு இருக்கின்றது. பாரதிய ஜனதா கட்சி ஆளக்கூடிய மாநிலங்களில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை இருக்கின்றது. உத்தரப் பிரதேசத்தில் அங்கீகாரம் இல்லாத மதரசாக்களை மூடும் அறிவிப்பை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பால் மதரசாவில் படித்தவர்கள் பொதுக் கல்வியை தொடர முடியாத நிலை உருவாகி உள்ளது. இப்படி சிறுபான்மையினரை தொடர்ந்து வஞ்சிக்கக்கூடிய அரசாக மத்திய, மாநில பாஜக அரசுகள் செயல்படுகின்றன.

நமது வெளியுறவுத்துறை அமைச்சர் வங்கதேசத்தின் விவகாரத்தை விளக்கிச் சொல்லும் பொழுது அந்த நாட்டின் சிறுபான்மையினர் பாதுகாப்பினை உறுதி செய்யப்பட்டிருப்பதாகக் கூறினார். வெளிநாட்டில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தக் கூடிய இந்திய அரசு இந்த நாட்டில் இருக்கக்கூடிய சிறுபான்மையினரின் பாதுகாப்பையும், அவர்களின் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE